முஸ்லிங்களிடமிருந்து தமிழர்கள் அரசியல் கற்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. – இரா.துரைரத்தினம்

IMG_2962முஸ்லிங்கள் தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து அரசியலைக் கற்றவர்கள். இதனை நான் மறுக்க வில்லை நிலைமை மாறி தற்போது முஸ்லிங்களிடமிருந்து தமிழர்கள் அரசியல் கற்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. தற்போது முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றமடைந்துள்ளது. காரணம் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்துடன் கைகோர்த்து பல அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்வதால் முஸ்லீம் கிராமங்கள் பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளன. தமிழ் கிராமங்கள் அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

இதை சொன்னவர் தமிழரல்ல. கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருக்கும் அமிர்அலி மட்டக்களப்பு துறைநீலாவணை தமிழ் கிராமத்தில் நடந்த வைபவத்தில் பேசும் போது தெரிவித்திருக்கிறார்.

அவர் என்ன நோக்கத்தில் இதை சொன்னார் என்பதை விட அவர் சொன்ன விடயங்களில் பல உண்மைகள் உள்ளன.

தொகுதி ரீதியான தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டால் கல்குடா தொகுதியில் தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி அமிர்அலி போன்றவர்களால் வெற்றி பெற முடியாது. மாவட்ட ரீதியான தேர்தல்களில் கூட இந்த நிலைமை தான் காணப்படுகிறது. கடந்த தேர்தலில் கூட கணேசமூர்த்தி, போன்றவர்கள் பெற்றுக்கொடுத்த வாக்குகளின் மூலமே அமிர்அலியால் வெற்றி பெற முடிந்தது. இதனால் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்காக கொண்டு அமிர்அலி தமிழ் கிராமங்களில் இத்தகைய பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அது அவரின் தவறல்ல.

முஸ்லீம் அரசியல்வாதிகளின் சாணக்கியமும் விவேகமும் தமிழ் அரசியல்வாதிகளிடம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற அமிர்அலி, அலிசாகிர் மௌலானா, ஹிஸ்புல்லா போன்றவர்கள் கணிசமான தமிழர்களின் வாக்குகளை பெற்றனர். அதேபோன்று வன்னி மாவட்டத்தில் வெற்றி பெற்ற றிசாத் பதியுதீன் கூட தமிழர்களின் வாக்குகளை பெற்றே 2004ஆம் ஆண்டிலிருந்து கடந்த தேர்தல் வரை வெற்றி பெற்றார்.

ஆனால் வடக்கு கிழக்கில் எந்த ஒரு தமிழ் வேட்பாளரும் முஸ்லீம் மக்களின் வாக்குகளை பெற்றது கிடையாது.
அபிவிருத்தியிலும் சரி தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதிலும் சரி முஸ்லீம் அரசியல் வாதிகளிடமிருந்து தமிழ் அரசியல் வாதிகள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்றைய யதார்த்தமாகும்.

1994ஆம் ஆண்டிலிருந்து முஸ்லீம் அமைச்சர்களின் கைகளிலேயே புனர்வாழ்வு புனரமைப்பு, மீள்குடியேற்றம் என்ற அமைச்சு இருந்து வருகிறது. 1994ஆம் ஆண்டு அஷ்ரப் அந்த அமைச்சை பொறுப்பேற்றார். அவர் மறைவிற்கு பின் பேரியல் அஷ்ரப், றவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் என தொடர்ந்து முஸ்லீம் அரசியல்வாதிகளின் கைகளிலேயே அந்த அமைச்சு இருந்து வருகிறது. இந்த முறை மட்டுமே இந்த அமைச்சு கொழும்பு தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் புனர்வாழ்வ புனரமைப்பு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு என்பது எந்த ஒரு அமைச்சுக்கும் இல்லாத சிறப்பு அதற்கு உண்டு. ஏனைய அமைச்சுகள் அந்த அமைச்சின் கீழ் வரும் துறைகளுக்கே நிதியை ஒதுக்க முடியும். அபிவிருத்திகளை செய்ய முடியும். ஆனால் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு எந்த துறைகளுக்கும் நிதியை ஒதுக்கி அபிவிருத்தி செய்ய முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, ஆகிய நகரங்களும், வாளைச்சேனையின் ஒரு பகுதியும் மட்டுமே முஸ்லீம்கள் வாழும் பிரதேசமாகும். நிலப்பரப்பில் இவர்கள் 10வீதத்தையே கொண்டிருக்கிறார்கள்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு செல்லும் பாதையில் இருக்கும் இந்நகரங்களின் அபிவிருத்தியும் தமிழ் கிராங்களின் அபிவிருத்தியும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகவே இருக்கும்.

ஓட்டமாவடியில் கால் வைத்ததும் வானுயர்ந்த பாடசாலை கட்டிடங்களும் வர்த்தக நிலையங்களும், காப்பெற் வீதிகள் என அபிவிருத்தி அடைந்த ஒரு நகரத்தை காண முடியும். ஓட்டமாவடியை கடந்து வாழைச்சேனை கிரான் போன்ற தமிழ் கிராமங்களில் கால் வைத்தால் கட்டிட இடிபாடுகளும் ஓலைக்கொட்டில்களுடன் கூடிய பாடசாலைகளைத்தான் காண முடியும்.

அதேபோன்று செங்கலடி போன்ற அபிவிருத்தியில் பின்தங்கிய தமிழ் கிராமங்களை கடந்து ஏறாவூருக்குள் கால் வைத்தால் அங்கு காணப்படும் அபிவிருத்திக்களை கண்டு யாரும் வியந்து போவார்கள்.

மட்டக்களப்பு நகரில் கூட இன்று வர்த்தக நிலையங்கள் அனைத்தும் முஸ்லீம்களின் கைகளில் தான் இருந்தது. முன்னர் ஒருகாலத்தில் மட்டக்களப்பு நகரின் வர்த்தகம் யாழ்ப்பாண தமிழர்கள் உட்பட தமிழர்களின் கைகளில் இருந்தன. ஆனால் தமிழ் இயக்கங்கள் உருவெடுத்த பின் அவர்களின் கப்பம் பெறும் தொல்லைகளால் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்த முடியாத தமிழர்கள் முஸ்லீம்களுக்கு விற்று விட்டனர். 2004ஆம் ஆண்டு கருணா குழு யாழ்ப்பாண வர்த்தகர்கள் அனைவரையும் வெளியேற்றினார்கள். அதை தொடர்ந்து அந்த வர்த்தக நிலையங்கள் அனைத்தும் முஸ்லீம்களின் கைகளுக்கே மாறியது.
அதேபோன்று மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனை கிராமங்களை கடந்து காத்தான்குடிக்குள் கால் வைத்தால் காத்தான்குடி வரவேற்கிறது என்ற நுழைவாயிலிருந்து காத்தான்குடி எல்லை வரை கட்டிடங்களும் வர்த்தக நிலையங்களையும் பார்த்து பிரமித்து போவார்கள். நாளாந்தம் தமிழ் கிராமங்களிலிருந்து சுமார் 2ஆயிரம் தமிழர்கள் காத்தான்குடிக்கு வேலைக்கு செல்கின்றனர். அவ்வளவு தூரம் காத்தான்குடி முன்னேறியிருக்கிறது. அதனை அடுத்து இருக்கும்

ஆரையம்பதி கிராமத்திற்குள் கால் வைத்தால் சிறு ஓலைக்குடில்களில் உள்ள தேனீர்கடைகளை தான் காண முடியும்.
தமிழ் கிராமங்களுக்கும் முஸ்லீம் கிராமங்களுக்கும் இடையிலான மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு காரணம் முஸ்லீம் அரசியல் வாதிகளின் சாதுரியம் தான். அவர்கள் கைகளில் இருந்த புனர்வாழ்வ புனரமைப்பு அமைச்சு என்ற பொன் முட்டையிடும் வாத்துதான் அந்த கிராமங்களையும் மக்களையும் முன்னேற்றடைய வைத்தது.

உதாரணமாக கல்வி அமைச்சினால் பாடசாலை அபிவிருத்திக்கு மட்டும் தான் நிதி ஒதுக்க முடியும். ஆனால் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு பாடசாலைக்கும் நிதி ஒதுக்க முடியும். வைத்தியசாலைக்கும் நிதி ஒதுக்க முடியும். துறைமுகத்தையும் கட்ட முடியும், வீதியையும் போட முடியும். அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கி அபிவிருத்தியை செய்ய கூடிய புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு 1994ஆம் ஆண்டிலிருந்து வேறு யாரின் கைகளுக்கும் செல்ல முடியாதவாறு முஸ்லீம் அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டார்கள்.

இன்று இந்த அமைச்சு தமிழரின் கைகளுக்கு வந்த போதிலும் முஸ்லீம் அமைச்சர்களிடமிருந்த சாதுரியமும் விவேகமும் இவரிடம் கிடையாது. வெறுமனே வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரிடமிருந்து காணிகளை பெற்றுக்கொடுப்பதாக பிரசாரம் செய்தாலும் அது பெரிய முன்னேற்றம் அடைந்ததாக தெரியவில்லை.

ஆனால் புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கும் ஹிஸ்புல்லா அந்த அமைச்சை நன்றாக பயன்படுத்தி மட்டக்களப்பில் உள்ள முஸ்லீம் கிராமங்களை அபிவிருத்தி செய்து வருகிறார்.

தமிழர்களிடம் அதிகாரத்தையும் பொறுப்புக்களையும் கொடுத்தாலும் அதை சரியாக பயன்படுத்த தெரியாது என்பதற்கு வடக்கு மாகாணசபையையும் கிழக்கு மாகாணசபையையும் உதாரணமாக பார்க்க முடியும்.

கிழக்கு மாகாணசபையில் வெறும் 7 உறுப்பினர்களை மட்டும் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் சிறப்பான ஆட்சியை நடத்துவது மட்டுமன்றி முஸ்லீம் கிராமங்களை பாரிய அளவில் அபிவிருத்தி செய்து வருவதையும் நாம் காணமுடிகிறது.

ஹாபிர் நஸீர் கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவி ஏற்ற பின் அரபு நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகளை பெற்று முஸ்லீம் கிராமங்களை அபிவிருத்தி செய்து வருகிறார்.

கடந்த வாரத்தில் கூட கிழக்கில் முதலிடுவோம் என்ற தலைப்பில் சர்வதேச வர்த்தக மகாநாடு ஒன்றை கொழும்பு கலதாரி ஹொட்டலில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிர் நஸீர் நடத்தியிருந்தார்.

இந்த மகாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சவுதி அரேபியா இளவரசர் பிரின்ஸ் அப்துல் அஸீஸ் அல்சவுத், அமைச்சர் ரவுப் ஹக்கீம், அமைச்சர் றிசாத் பதியுதீன், உட்பட சவுதிஅரேபியா, கட்டார், ஓமான், குவைத், ஓமான், மாலைதீவு, பங்களாதேஷ், கனடா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் பல இடங்களுக்கும் இந்த முதலீட்டாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் சென்ற இடங்களில் 99வீதமானவை முஸ்லீம் பிரதேசங்கள் தான். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் முஸ்லீம் பிரதேசங்களிலேயே முதலீடுகளை செய்ய விரும்புவார்கள் என்ற யதார்த்ததையும் நாம் மறந்து விடக் கூடாது.

இதன் மூலம் 5 இலட்சம் முஸ்லீம்களுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் வெற்றி பெற்றால் கிழக்கில் வேலை இல்லாத முஸ்லீம்கள் ஒருவரை கூட கண்டு பிடிக்க முடியாமல் இருக்கும்.

இத்தனைக்கும் கிழக்கு மாகாணசபையை நடத்தும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 7 உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ளது. மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை வைத்து கொண்டு முஸ்லீம் கிராமங்களை அவர்கள் அபிவிருத்தி செய்யும் திறைமையை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆனால் வடக்கு மாகாணசபை என்ன செய்கிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீர் நஸீர் செய்யும் அபிவிருத்திக்கு முன்னால் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்யும் வேலைகளை ஒப்பிட்டு பார்த்தால் வெறும் பூச்சியம் தான்.

வடக்கு மாகாணசபையில் 30க்கு மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவி ஏற்ற விக்னேஸ்வரனின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் கடந்துள்ளது. யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் தேவைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என புலம்பிக்கொண்டிருப்பதை விட வழங்கப்பட்ட அதிகாரங்களை சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது.

வடமாகாணசபை தேர்தல் காலத்தில் மாகாணசபைக்கான அதிகாரங்களை நாம் கையில் எடுப்போம். அதற்கு சட்டத்தில் இடமுண்டு என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேடைகளில் பிரசாரம் செய்தார். மக்கள் பெரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்ததை விட மிக அதிகமான ஆதரவை வழங்கி 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தெரிவானார்கள்.

மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவை கூடி தீர்மானங்களை நிறைவேற்றியதை தவிர வடமாகாணசபை வேறு எதையும் சாதித்தது கிடையாது. நூற்றுக்கணக்கான தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவற்றில் வடமாகாணசபைக்கு சம்பந்தம் இல்லாத தீர்மானங்கள் அதிகம். அவற்றை விட்டாலும் வடமாகாணசபையின் அதிகாரங்களுக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் கூட நடைமுறைப்படுத்தப்பட்டது கிடையாது.

வடமாகாண முதலமைச்சரும் அச்சபையும் செய்த ஒரேஒரு சாதனை. சுன்னாகம் நிலத்தடி நீரில் நஞ்சு கலந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்ததுதான்.

சுன்னாகத்தைச் சுழவரவுள்ள ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டதையும் இந்நீர் நஞ்சாக மாறியுள்ளதையும் இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொண்ட போது அதனை மூடிமறைத்து அழிப்பை நடத்திய நிறுவனத்திற்கு துணை சென்ற வட மாகாண சபையின் தலைவருக்கு தமிழ் மக்களின் நலனில் என்ன பற்று என்ற கேள்வி பலரின் மத்தியிலும் தொக்கு நிற்கிறது.

வடமாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று. வடமாகாண கடல்வளம் அழிக்கப்படுவது. இந்திய மீனவர்களாலும் தென்னிலங்கை மீனவர்களாலும் வடமாகாண கடல்வளம் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் வடமாகாணத்தில் உள்ள இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தமது தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்ட போது கூட வட மாகாண சபை இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் கிராமங்களின் காடுகள் அழிக்கப்பட்டு அரசியல் செல்வாக்கின் மூலம் அம்மாவட்டத்தை சேராதவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வடமாகாண முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார். ஒரு தடவையாவது அப்பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்டாரா?

வன்னியில் இரண்டு கைகளையும் இழந்த ஒரு பெண் போராளி படும் வேதனைகளை அண்மையில் சக்தி தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. மீண்டும் யுத்தம் நடைபெற வேண்டும் என விரும்பும் வெளிநாடுகளில் உள்ள சில தரப்புகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்படும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அப்பெண் போராளி போன்றவர்களின் துயர் துடைக்க என்ன செய்தார்?

மேடைகளில் எழுதி வாசிக்கும் வார்த்தை யாலங்களை விட முதலமைச்சர் விக்னேஸ்வரனிடமிருந்து வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பது நிரூபணமாகி வருகிறது.

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் அபிவிருத்தியில் தமது பிரதேசத்தை முன்னேற்றி வரும் அதே வேளை அரசியல் தீர்வு வரும் போது தமக்கான பங்கை மிக சாதுரியமாக பெற்றுக்கொள்வார்கள். அத்திறமை அவர்களிடம் உண்டு.

தமிழர்களின் போராட்டத்தின் பலனாகத்தான் இலங்கை இந்திய ஒப்பந்தமும் மாகாணசபையும் உருவானது. ஆனால் அந்த மாகாணசபையை முஸ்லீம்கள் மிகச்சிறப்பாக பயன்படுத்தி கொண்டார்கள்.

ஆனால் தமிழர்கள் அபிவிருத்தியும் இன்றி அரசியல் உரிமையும் இன்றி வானம் பார்த்தவர்களாகவே உள்ளனர்.

-இரா.துரைரத்தினம்-

 

 

நன்றி- தினக்கதிர்

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply