அரநாயக்கவில் சடலங்களை மீட்கும் பணிகளை நிறுத்துவது குறித்து ஆராய்வு

sunanthaஅரநாயக்க பகுதியில் மேற்கொண்டுவரும் தேடுதல் பணிகளை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் கிராம வாசிகளுடனும், பிரதேச செயலாளர் மற்றும் மதத் தலைவர்களுடனும் பேசித் தீர்மானிக்கப்படும் என தேடுதல் பணிகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். தேடுதல் பணிகள் தொடர்ந்து வருவதாகவும், இதுவரை 27 சடலங்களும், 20 உடற்பாகங்களும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், உடற்பாகங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் காணப்படுவதாகவும் கூறினார். மீட்கப்பட்ட 27 சடலங்களில் 8 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லையென அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

 

ஆரம்பத்தில் 200 இராணுவத்தினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோதும் தற்பொழுது 100 பேரே தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். தேடுதல் பணியை பூர்த்தி செய்வதற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. தேடுதல் பணிகளை நிறுத்துவது தொடர்பில் கிராம மக்கள், பிரதேச செயலாளர் மற்றும் மதத் தலைவர்களுடன் பேசித் தீர்மானிக்கப்படும். இதற்கான பொறுப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் தீர்மானத்துக்கு அமைய தேடுதல்களை நிறுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

 

கிராம வாசிகளின் தகவல்களுக்கு அமைய மேலும் 100 பேர் மண் சரிவில் சிக்குண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. அதனால்தான் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வாகக் காணப்படுகிறது.

 

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முப்படையினரும் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பிரிவினரின் படகுகள் பயன்படுத்தப்படுவதில்லை. நேற்றையதினம் காலை மலசலகூடங்கள், கிணறுகள் என்பவற்றை சுத்தப்படுத்தும் பணிகளில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply