தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது பற்றி டெல்லியில் சுஷ்மா சுவராஜ் தலைமையில் ஆலோசனை

susmaதமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது பற்றி டெல்லியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் மத்திய சாலை போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், வேளாண்மை துறை மந்திரி ராதாமோகன் சிங், வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், தமிழக அரசின் மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற 13 மீனவர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், புதுச்சேரியில் இருந்து 2 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளில் ஏறத்தாழ 1,500 மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டது குறித்தும், படகுகள் விடுவிக்கப்பட்டது குறித்தும் கூட்டத்தில் மந்திரி சுஷ்மா சுவராஜ் விளக்கி கூறினார்.

இலங்கையில் தற்போது பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை மற்றும் மீன்வளத்துறை மந்திரிகளுடன் விரைவில் கலந்து ஆலோசிக்க ஏற்பாடு நடந்து வருவதாக தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள இருதரப்பு மீனவர்களும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் தீர்வு காண்பது பற்றியும், நம்முடைய மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க உதவுவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது

இந்திய மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு பற்றிய பயிற்சியை மேம்படுத்துவது. பயிற்சி அற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வது. பொருளாதார ரீதியாக அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது மற்றும் நீண்ட கால அணுகுமுறைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு சிதிலமடைமந்து வரும் படகுகள் பற்றி மீனவ பிரதிநிதிகள் கவலை தெரிவித்தார்கள். அவற்றை விரைவில் மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அடுத்த மாதத்துக்குள் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும், கூடிய விரைவில் இந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படும் என்றும் நம்புகிறேன்.

இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

இந்திய மீனவர் பேரவை தலைவர் எம்.இளங்கோ கூறுகையில், இந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் மீனவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாகவும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்டு அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply