மூடிய கதவுகளுக்குள் இரகசிய தீர்மானங்கள் எடுக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை

ranilபுதிய சுங்க கட்டளைச் சட்டம் தொடர்பில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தப்படும். மூடிய கதவுகளுக்குள் இரகசிய தீர்மானங்கள் எடுக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.23/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஐ.ம.சுமு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தயாரிக்கப்பட்டுவரும் சுங்க கட்டளைச் சட்டத்தின் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் விவாதம் நடத்தப்படும். இந்த விடயத்தை மேற்பார்வைக் குழுக் கூட்டங்களிலும் விவாதிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் கூறினார்.

“சுங்கத் திணைக்களத்தில் தொழில்நுட்ப வசதிகளை நிறுவுவதற்கு சுங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டியது அவசியமனாது. தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தற்போதுள்ள சுங்க கட்டளைச் சட்டத்தில் இடமில்லையென்பதால் திருத்துவது அவசியமானது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொழிற்சங்கங்கள், வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் சம்மேளனங்களுக்கு அப்பாலுள்ள வெளித்தரப்புக்கள் உட்பட சகலருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும். இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு மேலும் விளக்கமளிப்பார் எனவும் தெரிவித்தார்.

தனது கேள்வியை முன்வைத்த தினேஷ் குணவர்தன எம்.பி கூறுகையில், சுங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்க திணைக்கள தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுங்க கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டுள்ளமையால், அரசாங்கம் இதனை இரகசியமான முறையில் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கிறது என்ற சந்தேகம் சுங்க திணைக்கள பணியாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர்கள் ஆரம்பித்திருக்கும் சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தால் சுங்கத் திணைக்களம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது எனக் கூறினார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாயின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply