இப்படி எல்லாம் கவிதை எழுதுவாரா, கமல்ஹாசன்?: நெட்டிசன்கள் ஆச்சரியம் : ஆவேசம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாநில அரசியல் நிகழ்வுகளை ரத்தின சுருக்கமாக சித்தரித்து, நடிகர் கமல்ஹாசன் பெயரால் இணையதளத்தில் உலாவரும் நேர்த்தியான, கருத்தாழம் மிக்க அற்புத வரிகளால் இயற்றப்பட்ட கவிதை பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், அடுத்தடுத்து மாநிலத்தின் அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகவும், எதிர்பாராத திருப்புமுனைகளை சந்தித்துவரும் தமிழக ஆட்சியைப் பற்றியும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்துள்ளார்.

சில பேட்டிகளிலும் தனது மனதுக்கு சரி என்று தோன்றுவதை வெளிப்படையாக தெரிவித்தும் வரும் கமல்ஹாசன் பெயரால் தற்போது வெளியாகியுள்ள ஒரு கவிதை இணையவாசிகள் இடையே பரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மன்னர்கள் ஆட்சிக் காலத்தின்போது மக்களின் மனநிலைக்கு மாறாக அரசு நடத்தும் ஆட்சியாளர்களை தட்டிக்கேட்டு, குத்திக்காட்டி, திருத்தும் வகையில் பண்டைக்கால தமிழ் புலவர்கள் தங்களது கவித்திறனை ஒரு போராயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய கவிதை வடிவத்தை ‘அறக்கவி’ ‘ஆசுக்கவி’ என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.

‘அறம்’ எனப்படும் நீதி, நியாயம் மற்றும் தர்மத்தை ஆட்சியாளர்கள் மதிக்காமல் மீறும்போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சில புலவர்கள் இதுபோன்ற அறக்கவிதைகளை இயற்றி ஆட்சியாளர்களை அகற்றும் புரட்சியாளர்களாக மக்களை மாற்றிய நிகழ்வுகள் வரலாற்றில் பரவலாக காணக் கிடக்கின்றது.

அவ்வாறு, தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாக வெகு துல்லியமாகவும் ரத்தின சுருக்கமாகவும் அழகிய தமிழ்நடையில், சந்தம் நழுவாத சிந்தாக இயற்றப்பட்ட ஒரு கவிதை தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, வைரலாக பரவியும் வருகிறது.

‘சிங்கமில்லாக் காடு’ ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை’ என்ற தலைப்புகளுடன், ‘நடிகர் கமல்ஹாசன் எழுதிய கவிதை’ என்ற அறிமுகத்துடன் பலரது பகிர்வாக உலாவரும் அந்த அற்புதப் படைப்பின் வைர (டைனமைட்) வரிகள் இதோ..:-

செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது

உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!

வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!

ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!

அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!

நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!

காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!

காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!

இவ்வாறு அந்த கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சமூகக் கோபம், கண்ணதாசனின் உவமைநயம், வாலியின் சொல்லாட்சி ஆகியவை ஒருசேர உள்ளடங்கிய இந்தக் கவிதையை படிக்கும் கமல்ஹாசனின் ரசிகர்கள் அவர் கவிதைத்துறையையும் விட்டுவைக்கவில்லை என்ற மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் கிடக்கின்றனர்.

அதேவேளையில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் திருடர்கள், நரி, ஓநாய், திருடர்கள், அடிமைகள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளதை அறிந்து ஆவேசப்படுகின்றனர்.

இந்நிலையில், இந்த கவிதைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து பதிவிட்டுள்ள அவர், ‘நீள் கவிதை என் பெயரில் உலாவருகிறது. தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன். அந்தத் தப்பு எனதல்ல. செய்தவர் துணிந்து மன்னிப்புக் கேட்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்தாழம் மிக்க இந்த கவிதை திருவிழா கூட்டத்தில் காணாமல் போன ‘அனாதை குழந்தை’ போல் தற்போது ஆகிவிட்டாலும், இணையத்தில் மறுபதிவுகளும், மறுபகிர்வுகளும் மென்மேலும் வைரலாகி கொண்டே வருவது, குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply