எனது மகனை கண்டுபிடிக்கும் வரை நான் போராடிக் கொண்டேயிருப்பேன்

எனது மகன் உட்பட 40 பிள்ளைகளின் பெயர் விபரங்களை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து எனது பிள்ளையை நான் தேடாத இடமில்லை. பூஸா தடுப்பு முகாம்வரை ஓடி ஓடி தேடிவிட்டேன் கிடைக்கவில்லை.எனது மகனை கண்டுபிடிக்கும் வரை நான் போராடிக் கொண்டேயிருப்பேன் என உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள தாயொருவர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கள் உறவுகளுக்கு நீதிகோரி வவுனியாவில் சுழற்சிமுறையில் 28 ஆவது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சங்கரப்பிள்ளை பாலலோஜினி என்ற தாயே இவ்வாறு தெரிவித்தார்.

 

வவுனியா சாத்திரி கூளாங்குளத்தில் வசித்துவரும் இவர் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் தனது மகனை கையளித்ததாக தெரிவித்தார். இவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

இறுதியுத்தம் முடிவடைந்து நாங்கள் வன்னியிலிருந்து வவுனியா நோக்கி பஸ்சில் வந்துகொண்டிருந்த போது, எனது மகனை ஓமந்தையில் வைத்து படையினர் கைது செய்தனர்.

 

எனது மகனை விசாரித்த இராணுவத்தினர் அவரை என்னுடன் அனுப்ப மறுத்ததுடன் நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்கள் அடுத்த பஸ்சில் உங்கள் மகனை அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்தனர்.

 

அதன் பின் அதே ஆண்டு அதாவது 14-07-2009 ஆண்டு செட்டிக்குளம் பாடசாலையில் சங்கரப்பிள்ளை ரதனின் உறவினர் யார் இருக்கிறார்கள் என்று படையினர் விசாரித்தனர். நான் அங்கு இல்லாத நிலையில் எனது அண்ணா! சங்கரப்பிள்ளை ரதன் எனது தங்கையின் மகன்தான் என்னிடம் ஒப்படையுங்கள் என கேட்டிருந்தார்.

 

அத்துடன் எனது மகன் சங்கரப்பிள்ளை ரதனின் பெயர் மாத்திரமல்ல 40 பிள்ளைகளின் பெயர் விபரங்கள் காணப்பட்டது.

 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே அவர்களின் பெயர் விபரங்களை எங்களுக்கு அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து நான் எனது பிள்ளையை தேடாத இடமில்லை பூஸா தடுப்பு முகாம் வரை ஓடி ஓடி தேடிவிட்டேன் எனது மகனை கண்டுபிடிக்கும் வரை நான் போராடிக்கொண்டேயிருப்பேன்.

 

கடந்த 23-01-2017 அன்று வவு னியாவில் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணா விரதப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தேன். அப்போராட்டத்தில் இருந்தவர்களுக்கு தீர்வு ஏதும் வழங்கப்படாமல் நல்லாட்சி அரசு எங்களை ஏமாற்றி விட்டது.

 

அதனைத்தொடர்ந்து மீண்டும் நாங்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி இன்றுடன் 28 நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

 

எனது பிள்ளையை நான் இராணுவத்திடம் கையளித்தேன். இராணுவப்புலானாய்வு பிரிவினரால் 2014 ஆம் ஆண்டு எங்களது ஊரில் எனது பிள்ளையை பற்றி விசாரணை செய்திருந்தார்கள். ஆகவே எனது பிள்ளை உயிருடன் தான் இருக்கிறான். எனது பிள்ளைகள் கிடைக்காமல் நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம். இந்த நல்லாட்சி அரசாங்கமும், எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக எங்கள் உறவுகளை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என உறுதிபடத் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply