சவுதி அரேபியாவை ஏமாற்றி 48 ஆயிரம் கோடி டாலர்களை கறந்து விட்டார்: டிரம்ப் மீது ஈரான் மந்திரி பாய்ச்சல்

அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவருக்கு பல நாடுகளை சேர்ந்த பிரதமர்களும், அதிபர்களும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.அப்போது தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு அன்பழைப்பும் விடுத்திருந்தனர். இதனை ஏற்று முதன்முறை வெளிநாட்டு பயணமாக டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியா நாட்டின் தலைநகரான ரியாத் நகரை வந்தடைந்தார்.

சவுதி மன்னர், இளவரசர்கள் மற்றும் அந்நாட்டின் மந்திரிகளை சந்தித்து அமெரிக்கா, சவுதி அரேபியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.

அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக அமெரிக்காவிடம் இருந்து சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ தளவாடங்களை வாங்க சவூதி அரேபியா ஒப்பந்தம் செய்துள்ளது.

பின்னர், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசிய டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என பேசினார். தீவிரவாதத்திற்கு எதிராக நடக்கும் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் எதிரி நாடான ஈரான் அரசு அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியா நாட்டுக்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு அரசை ஏமாற்றி 48 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை கறந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முஹம்மது ஜாவத் ஸரிப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜனநாயகம் மற்றும் நவீனமயம் என்ற பெயரில் சவுதி அரசை ஏமாற்றி 48 ஆயிரம் கோடி டாலர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கறந்து விட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரான் அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த பின்னர் டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply