மான்செஸ்டர் தாக்குதலில் 7 பேர் கைது: தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் திங்கட்கிழமை இரவு அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த அரங்கில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மான்செஸ்டர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என டெலகிராம் செயலி வழியாக ஐ.எஸ் இயக்கத்தினர் அறிவித்தனர். ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம் தாக்குதலில் முக்கிய தற்கொலைப்படை தீவிரவாதியை போலீசார் அறிவித்தனர்.

லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பவர் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதே தகவல்களை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உறுதி செய்தனர். இதையடுத்து, லிபியாவில் இருக்கும் அபேதியின் தந்தை ரமதான் மற்றும் சகோதர் ஹசீம் ஆகியோரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்தனர். அபேதியின் மூத்த சகோதரர் இஸ்மாயில், மான்செஸ்டரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், மத்திய இங்கிலாந்தின் நனீட்டன் நகரில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதற்கிடையே மான்செஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அபேதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும், அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்த்துவிடும் முக்கிய நபரான ரபேல் ஹாஸ்ட்லி அவருக்கு நெருக்கமாக இருந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

ரபேல் ஹாஸ்ட்லி குறித்த தகவலை ஆய்வு செய்ததில், இதற்கு முன்பு அபேதியும் அவரும் ஒரே எஸ்டேட்டில் தங்கியிருந்ததும், ஒரே மசூதியில் தொழுகை செய்ததும் தெரியவந்திருப்பதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply