3 அரச நிறுவனங்களை வழங்குமாறு ஜனாதிபதியிடம் நான் கேட்கவில்லை

திரைப்படக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட மூன்று அரசாங்க நிறுவனங்களை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுத்ததாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.காணி அமைச்சின் கீழ், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச அச்சகக் கூட்டுத்தாபனம், அரசாங்க அச்சகம் ஆகியவற்றை தனக்கு வழங்குமாறு அமைச்சர் கயந்த கருணாதிலக கோரிக்கைவிடுத்ததாக ஊடகங்கள் சிலவற்றில் பிரதான செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக, இந்தச் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையென மறுத்ததுடன், தான் எந்தவொரு அரசாங்க நிறுவனத்தையும் தனக்கு வழங்குமாறு கோரவில்லையென்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவை விளக்கமொன்றை சபைக்குள் வழங்கியிருந்த அமைச்சர், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தி தெளிவுபடுத்தியிருந்தார்.

இதுவரை தான் வகித்த பதவிகளோ அல்லது அமைச்சுப் பொறுப்புக்களோ கேட்டுப் பெறப்பட்டவை இல்லையென்று சுட்டிக்காட்டிய அவர், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை முறையாக, சரியான முறையில் முன்னெடுத்துச் சென்றதாகவும் கூறினார்.

இவ்வாறான நிலையில் மக்களுடன் நெருங்கி சேவையாற்றக்கூடிய காணி அமைச்சு கிடைத்துள்ளது. ஊடகத்துறை அமைச்சராக பணியாற்றியபோது மக்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய சந்தர்ப்பம் குறைவாக இருந்தது. எனினும், காணி அமைச்சர் பதவியினூடாக எனது தொகுதி மக்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கும் சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எந்தவொரு அரசாங்க நிறுவனத்தையும் எனது அமைச்சின் கீழ் வழங்குமாறு ஜனாதிபதியிடமோ அல்லது பிரதமரிடமோ கோரவில்லை. அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் இதுபற்றி அவர்களுடன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இவ்வாறான நிலையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச அச்சகக் கூட்டுத்தாபனம், அரசாங்க அச்சகம் ஆகிய நிறுவனங்களை எனது அமைச்சின் கீழ் வழங்குமாறு கோரியிருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுவும் தலைப்புச் செய்திகளாக வெளியாகியுள்ளன. என்னுடைய கருத்து கேட்கப்படாமல், பேச்சாளர் ஒருவர் என மேற்கோள்காட்டி இச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தகவலறியும் சட்டத்தை கொண்டுவந்த அமைச்சர் என்ற ரீதியில் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரத்தை மதிக்கின்றேன்.

எனினும், இவ்வாறான செய்திகளை வெளியிடும்போது எனது கருத்தையும் பெற்று அதற்குரிய பிரசாரம் வழங்கியிருக்கவேண்டும். ஊடகத்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் எந்தவொரு ஊடகத்துக்கும் அழுத்தம் கொடுக்கவோ அல்லது பலவந்தப்படுத்தவோ இல்லை. எனது காலத்தில் எந்தவொரு ஊடகவியலாளரும் அச்சுறுத்தப்படவுமில்லை.

எனவே, தவறான செய்திகளைப் பிரசுரித்த ஊடகங்கள், தனது விளக்கத்துக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து செய்திகளைப் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சர் கயந்த கருணாதிலக ஜனாதிபதியிடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. அமைச்சுக்களுக்கான நிறுவனங்களை ஜனாதிபதி உரியவாறு வர்த்தமானி அறிவித்தலில் அறிவிப்பார். அது பற்றி ஜனாதிபதியும், பிரதமரும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பார்கள்.

அமைச்சர் கயந்த கருணாதிலக்க மூன்று அரசாங்க நிறுவனங்களை தனக்குக் கோரியதாக வெளியான செய்திகள் அப்பட்டமான பொய் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply