பலி எண்ணிக்கை 120–ஐ எட்டியது: மழையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியா உதவி

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி வரும் மழையால் நாட்டின் தென்மேற்கு பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சுமார் 14 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. ஆங்காங்கே பயங்கரமான நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 120–ஐ எட்டி உள்ளது. மேலும் 150 பேர் மாயமாகி இருக்கிறார்கள். ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்வதால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலங்கையின் முப்படையினர் மீட்புபணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுமாறு ஐ.நா மற்றும் அண்டை நாடுகளுக்கு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி இலங்கையின் துயர்நீக்கும் பணிகளில் இந்தியா இறங்கி உள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 போர்க்கப்பல்கள் நிவாரணபொருட்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

இதில் ஐ.என்.எஸ். கிரிச் போர்க்கப்பல் நேற்று காலையில் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது. அதில் சென்றுள்ள மீட்புக்குழுவினர், இலங்கை கடற்படை மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ஏராளமான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன.

 

இதே போல் ஐ.என்.எஸ்.ஸர்துல் மற்றும் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா ஆகிய 2 போர்க்கப்பல்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை சென்றடையும் என தெரிகிறது. இவற்றில், மீட்புபணிகளுக்காக ஹெலிகாப்டர்கள், படகுகள் உள்ளிட்டவையும், மருந்துகள், உணவுகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் மீட்புபணிகளில் இந்தியா துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply