இந்தியாவை பழிவாங்க இது பொன்னான வாய்ப்பாகும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இம்ரான் கான் எச்சரிக்கை

இங்கிலாந்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ‘டாப்-8’ நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது.‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

கடந்த 12-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. ‘ஏ’ பிரிவில் இருந்து இங்கிலாந்து, வங்காளதேசமும், ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும் அரை இறுதிக்கு முன்னேறின.கடந்த 14-ந் தேதி நடந்த முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், 15-ந் தேதி நடந்த 2-வது அரை இறுதியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கோப்பையை வெல்வதற்கான இந்தப் போட்டியில் வீராட் கோலி தலைமையிலான இந்தியா – சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் நாளைய போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் நிச்சயம் வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் இம்ரான் கான்.

பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் இம்ரான் கான். தற்போது அரசியல்வாதியாகவும் உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

போட்டியில் இந்தியாவிடம் படு தோல்வி அடைந்ததற்கு நாளை கண்டிப்பாக பழி வாங்க வேண்டும். இது பாகிஸ்தானுக்குக் கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பாகும். இந்தியாவிடம் நாம் இழந்த பெருமையை மீட்டெடுக்க கிடைத்துள்ள வாய்ப்பு. முதல் போட்டியில் நாம் தோற்ற விதத்தை சரி செய்ய நாளை நாம் வென்றாக வேண்டும்.

இந்தியாவிடம் நாம் பெற்ற தோல்வி மிகவும் மோசமானது, அவமானகரமானது. இப்போது அதை சரி செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

டாஸ் வென்றால் இந்தியாவை பேட் செய்ய பணிக்கக் கூடாது. காரணம் இந்தியாவிடம் அருமையான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. அவர்களை முதலில் பேட் செய்ய விட்டால் மிகப் பெரிய ஸ்கோரை எடுத்து விடுவார்கள்.

பிற அணிகளைப் போல இந்தியாவை எண்ணி விடக் கூடாது. இந்தியா வலுவான அணி. மிக வலுவான பேட்டிங்கைக் கொண்ட அணி. நமது பந்து வீச்சாளர்களுக்குத்தான் அதிக பிரஷர் உள்ளது. எனவே டாஸ் வென்றால் நாம் முதலில் பேட்டிங்கை எடுத்து விடுவதே நல்லது என்றார் இம்ரான்.

இம்ரான் மேலும் கூறுகையில் நீ்ண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவிடம் 3 அல்லது 4 நல்ல வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர். மிகச் சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. சுதாரிப்பான விக்கெட் கீப்பர் இருக்கிறார். உண்மையில் பாகிஸ்தானை விட வலுவான அணியாகவே இந்தியா திகழ்கிறது. அதேசமயம், வெற்றி களிப்பில் அவர்கள் அசட்டையாக இருப்பதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply