விடுதலைப் புலிகளை விடுவிக்க முடியாது : நீதியமைச்சர்

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் 71 உறுப்பினர்களை எக்காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாதென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே நீதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையல், “கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என கூறுவது முற்றிலும் பொய்யான விடயம்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிகள் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் கடும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 71 பேரை மட்டுமே இன்னும் தடுப்பில் உள்ளனர். பேருந்துகளில் குண்டு வைத்தல், கொலை என பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவர்களை மட்டும் எக்காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாது. அவர்கள் பயங்கரவாதிகள்” எனவும் நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர், இலங்கையில் மோசமான சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், போர்க்குற்றம் இழைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply