இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ள அதிபர் உத்தரவு

இந்தோனேசியாவில் அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ போதை பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில், அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் அரசியல் கட்சித்தலைவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், கைது செய்யும்போது எதிர்ப்பு தெரிவித்தால் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்று சட்ட அமலாக்கல் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இதில் உறுதியாக இருங்கள். குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து இந்த நாட்டுக்குள் போதை பொருள் கடத்தல்காரர்கள் நுழைந்தால் எச்சரிக்கையுடன் இருங்கள். அவர்கள் சிறிதளவு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவர்களை சுட்டு விடுங்கள்” என்று குறிப்பிட்டார். ஆனால் ஜோகோ விடோடோவின் இந்த உத்தரவுக்கு வலதுசாரி மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை கண்காணிப்பக ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியாஸ் ஹார்சோனோ, “சரியான நடைமுறைகளை பின்பற்றாமல், நினைத்தவுடன் சுட்டுத்தள்ளுவதற்கு அதிபரின் உத்தரவு பச்சைக்கொடி காட்டுவதுபோல அமைந்துள்ளது. சட்ட அமலாக்கப்பிரிவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார். இந்தோனேசியாவில், 5 கிராம் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டாலே, அந்த நாட்டுச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளில் அங்கு இலங்கைத்தமிழர் மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட 18 பேர் போதை பொருள் கடத்தலில் சிக்கி, மரண தண்டனை விதித்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply