சவூதியில் 15 வயதுக்குட்பட்ட திருமணங்களை தடை செய்யப் பரிந்துரை

சவூதி அரேபியாவில் 15 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளை திருமணம் முடித்துக்கொடுப்பது தடைசெய்யப்பட வேண்டும் என்றும், திருமண வயது 15 தொடக்கம் 18 வரை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் சவூதி சூரா கவுன்ஸில் உறுப்பினர்கள் அந்நாட்டு நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் சூரா கவுன்ஸில் உறுப்பினர்களான மூதி அல்-ஹலப், லதீபா அல்-ஷாலன், நூரா அல்- முஸாஇத், இஸ்ஸா அல்- கைத் மற்றும் பவ்ஸியா அபா அல்- காலி ஆகியோரே மேற்படி பரிந்துரையை மேற்கொண்டுள்ளனர்.

இளம் வயது திருமணங்கள் உடல், உளவியல், சமூக ரீதியாக பல தாக்கங்களையும் ஏற்படுத்துவதாகவும், ஷரீஆ சட்ட திட்டங்கள் மனிதனை தீங்கிலிருந்து பாதுகாப்பதாகவே அமைந்துள்ளதால் இவை ஷரீஆவுக்கு முரண்படுவதில்லை என்பதையும் அவர்கள் நீதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருமணம் முடிக்கும் மண மகனின் வயது, மண மகளின் வயதில் இரு மடங்காக இருக்கக் கூடாதென்றும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சவூதி அரேபியாவின் சூரா கவுன்ஸில் உறுப்பினர்கள் அந்நாட்டு நீதி அமைச்சுக்கு முன்வைத்துள்ள பரிந்துரைகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
* திருமணத்திற்கு மண மகள் மற்றும் தாயின் அனுமதி பெறப்பட வேண்டும்.
* மண மகள் உடல், உளவியல், சமூக ரீதியாக திருமணத்திற்கு தயார் என்ற மருத்துவ சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
* திருமணம் சட்டபூர்வமாக சிறப்பு நீதிபதியொருவரால் நிச்சயிக்கப்பட வேண்டும்

பல முஸ்லிம் நாடுகளும் திருமணத்திற்கு வயது குறித்துள்ளதையும், எகிப்தில் 18 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளைகளை திருமணம் செய்துவைக்க முடியாதென்றும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இள வயது திருமணங்கள் சுகாதார பிரச்சினைகளை மாத்திரமன்றி, பாடசாலை இடைவிலகல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண்கள் கல்வி, சமூக, கலாசார விடயங்களில் மேம்படுத்தப்பட வேண்டுமென்று சவூதி அரேபியாவின் சூரா கவுன்ஸில் உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply