உத்தரப் பிரதேச மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 17 பச்சிளம் குழந்தைகள் உள்பட 30 குழந்தைகள் பலியாகின. மருத்துவமனைக்கு பிராண வாயு (ஆக்ஸிஜன்) சிலிண்டர் விநியோகித்துவந்த தனியார் நிறுவனம் நிலுவைத்தொகைக்காக ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியதே குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு ரூ.70 லட்சம் பாக்கி இருந்ததாகத் தெரிகிறது.

ஆனால், இது குறித்து மாவட்ட நீதிபதி கூறும்போது, “ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை. பல்வேறு நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் ஒரே நேரத்தில் பலியாகினர்” என்றார். சிலர் மூளைக் காய்ச்சல் காரணமாக இறந்ததாகவும் அவர் கூறினார்.

இதே கருத்தை உத்தரப் பிரதேச அரசும் கூறியுள்ளது. இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கடிதம் எழுதிய நிறுவனம்..

இதற்கிடையில், பிஆர்டி மருத்துவமனைக்கு (பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ) ஆக்ஸிஜன் விநியோகித்துவந்த புஷ்பா சேல்ஸ் என்ற நிறுவனம் கடந்த 1-ம் தேதி (ஆகஸ்ட் 1) அன்று எழுதிய கடிதத்தில் தங்கள் நிறுவனத்துக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையில் ரூ.63 லட்சத்தை உடனடியாகத் தராவிட்டால் ஆக்ஸிஜன் விநியோகம் நிறுத்தப்படும் என எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு மேற்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply