வடகொரியாவின் ஏவுகணை மிரட்டல் எதிரொலி அமெரிக்கா – ஜப்பான் கூட்டுப் போர் பயிற்சி

வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவிவரும் வேளையில் அமெரிக்காவும் ஜப்பானும் நேற்று கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டன. வடக்கு ஜப்பானில் நடைபெற்ற இந்த பீரங்கி வாகனப் போர் பயிற்சியில் சுமார் 300 வீர்ர்கள் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கப்போவதாக வடகொரியா விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே பதற்றமான வார்த்தை போர் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ‘வடக்கு வைப்பர் 2017’ என்று கூட்டுப் போர் பயிற்சியை அமெரிக்காவும் ஜப்பானும் கடந்த 10-ம் தேதி தொடங்கின.

ஜப்பானின் நில தற்காப்புப் படையின் (ஜிஎஸ்டிஎப்) 1300 வீரர்களும் அமெரிக்க கடற்படையின் 2 ஆயிரம் வீரர்களும் பயிற்சி பெறும் வகையிலான இந்த கூட்டுப் போர் பயிற்சி வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக நேற்று சுமார் 300 வீரர்கள் தரை வழி தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஜிஎஸ்டிஎப் மற்றும் அமெரிக்க கடற்படை இடையே ஹொக்கைடோ தீவில் நடைபெறும் முதல் பயிற்சி இதுவாகும். எந்தவொரு குறிப்பிட்ட நாடு மற்றும் பிராந்தியத்தை மனதில் கொண்டு இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படவில்லை” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply