எடப்பாடி பழனிசாமி அணியில் தீபா இணைகிறார்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தொடங்கிய அவர் தி.நகர் சிவானந்தம் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வைத்தே தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்தார்.

இதனால் தீபாவின் வீட்டு முன்பு எப்போதும் தொண்டர்கள் கூட்டம் காணப்பட்டது. தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்ட தீபா அதுபோன்று எந்த முயற்சிகளிலும் இறங்கவில்லை. அதே நேரத்தில் அவரை சந்தித்து பேசுவது என்பது தொண்டர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இதனால் சோர்ந்து போன அவர்கள் தி.நகர் இல்லத்தில் குவிவதை நாளடைவில் தவிர்த்தே விட்டனர். தீபாவின் அரசியல் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.

இதற்கிடையே போயஸ் கார்டனில் தனது சகோதரர் தீபக்குடன் திடீர் மோதலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறினார்.

கட்சி பணிகளில் தீபா அதிக ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் திடீரென தீபா மீண்டும் தனது அரசியல் பயணத்தை தீவிரமாக தொடங்கியுள்ளார். அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பெரியார் படத்துக்கும் தனது வீட்டில் வைத்தே மரியாதை செலுத்தினார். நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

சில மாதங்கள் பிரிந்திருந்த கணவர் மாதவன் தீபாவுடன் மீண்டும் இணைந்த பின்னரே அவரது நடவடிக்கைகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைவதற்கு அவர் முடிவு செய்துள்ளார். இது அரியலூர் மாணவி அனிதாவின் வீட்டுக்கு செல்லும் வழியில் திருச்சியில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், மக்களும் தொண்டர்களும் விரும்பினால் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைவது பற்றி பரிசீலிப்பேன் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் தீபா கருத்து கேட்டு வருகிறார். இதுபற்றி அவர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிகிறது. பேரவையை கலைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சசிகலா குடும்பத்தினர் தி.மு.க.வின் கை கூலிகளாக செயல்பட்டு வருகிறார்கள். தொடக்கத்தில் இருந்தே தி.மு.க.வுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். அப்போதெல்லாம் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளவில்லை. காலம் கடந்து சசிகலா குடும்பத்துக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். அணியின் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்கள் போலியானவை. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தையும், கோட்டையையும் அணுக உள்ளோம்.

இவ்வாறு தீபா கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அணியில் இணைவதற்கு பரிசீலிப்பதாக கூறியுள்ள தீபா ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் அ.தி.மு.க.வில் இருந்து தனியாக பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வத்துடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ஓ.பி.எஸ். வீட்டிற்கு சென்ற தீபாவை ஆரத்தி எடுத்து அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.

அ.தி.மு.க.வின் இருகரங்களாக ஓ.பி.எஸ்.சும் நானும் செயல்படுவோம் என்று தீபா அப்போது கூறினார். ஆனால் அவரது அணியில் இணையாமல் தனியாக செயல்பட்டு வந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply