அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி நன்றி

மூன்று தசாப்த போரின் பின்னர் நாட்டில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கும் போர் இடம்பெற்ற பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவும் அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்க சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்காவின் அரசியல் விவகார உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனன் (Thomas Shannon ) க்கும் இடையில் இன்று (21) நியூயோர்க் நகரில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை போருக்கு பிந்திய காலத்தில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கையின் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகள் பாராட்டுக்குரியதென தோமஸ் ஷெனன் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் அரச நிர்வாகத்தில் மிகச் சிறந்த வெளிநாட்டுக் கொள்ளை தற்போது நிலவுவதாக சுட்டிக்காட்டிய அவர் இந்து சமுத்திர பிராந்தியத்தின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள நாடென்ற வகையில் இலங்கை பிராந்திய நாடுகளுடன் பேணிவரும் ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படாதென ஜனாதிபதிக்கு உறுதியளித்த உதவி இராஜாங்க செயலாளர், எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கை விஜயத்தில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply