மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள்: அதிமுக வரலாற்றில் செப். 22-ஐ மறக்க முடியுமா?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது.எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, பல்வேறு சிக்கல்களுக்கு இடையில், அதிமுகவை தன் கைக்குள் கொண்டுவந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தொண்டர்கள் எண்ணிக்கையை ஒன்றரை கோடியாக உயர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர். கடந்த 2011-ல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய அவர், 2016-ல் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். தொடர்ந்து 2-வதாக ஆளும் வாய்ப்பைப் பெற்று, 6-வது முறையாக முதல்வரானார். முன்னதாக, 2014-ல் நடந்த மக்களவை தேர்தலிலும் பெரும்பான்மை இடத்தைப் பிடித்ததுடன், நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க்களுடன் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் அதிமுகவுக்கு பெற்றுத் தந்தார்.

2016-ல் 6-வது முறை அரியணையில் ஏறிய அவர், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாற்றியபோது, ‘‘எனக்குப் பின்னும் இன்னும் 100 ஆண்டுகள் அதிமுக இருக்கும்’’ என கர்ஜித்தார். மின் கட்டண சுமையைக் குறைக்க 100 யூனிட் இலவச மின்சாரம், 500 மதுக்கடைகள் குறைப்பு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், இறுதியாகப் பங்கேற்றது, சென்னை விமான நிலையம் – சின்னமலை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை திறந்து வைத்த நிகழ்ச்சி.

2016 செப்டம்பர் 21-ம் தேதியன்று, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வழியாக மெட்ரோ ரயில் சேவையை அவர் தொடங்கிவைத்தார். அன்றுதான் இறுதியாக பொதுமக்கள் அவரை தொலைக்காட்சியில் பார்த்தனர். அவர், இறுதியாகப் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியும் அதுதான்.

அடுத்த நாளான செப் 22-ல் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு 74 நாட்கள் கழித்து, டிசம்பர் 5-ம் தேதி இரவு உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பல்வேறு அதிகார மாற்றங்கள், திருப்பங்களைச் சந்தித்துவிட்டது அதிமுக. அதிமுகவின் வரலாற்றில் இன்றைய தினம் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியது அல்ல. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் தொடங்கி, இறுதிவரை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது அவரது மறைவு. காரணங்கள் பல கூறப்பட்டாலும், அரசு அமைக்கும் விசாரணை ஆணையம் என்ன சொல்லும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply