இன்று உலக மீனவர் தினம்: மெரீனாவில் பொதுமக்களுக்கு இலவச மீன் விருந்து

மெரீனா கடற்கரைக்கு மீன் வாங்க செல்லும் போது, வஞ்சிரம் ஐநூறு ரூபாவா…? அயிரை என்ன விலை…? என்று விலையை கேட்டே மலைத்துப் போகும் மீன் பிரியர்களுக்கு இன்று மெரீனா கடற்கரையில் ஆச்சரியம் காத்து இருந்தது.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச மீன் விருந்து கொடுத்து அசத்தினார்கள் மீனவ நண்பர்கள். பா.ஜனதா மீனவர் அணி செயலாளர் சதீஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த மீன் விருந்து மற்றும் மீன் காட்சியை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து மீன் வறுவலை வாங்கி ருசித்தார்.

20-க்கும் மேற்பட்ட சாப்பாட்டு மேசைகளில் ஆவி பறக்க விதவிதமான மீன் வறுவல்கள்… தொக்குகள்…

வஞ்சிரம், தேங்காய் பாரை, இறால், நெத்திலி, கடல்வாத்து, தேந்தல், செருப்புமீன், பூங்குழல், ஊடான், கடல் வாத்து உள்ளிட்ட மீன் வறுவல்கள்! இறா தொக்கு!

சுறா மீனை வேக வைத்து முள்ளை நீக்கி உதிர்த்து அதன் பிறகு தேங்காய், மிளகு போட்டு புட்டாக தயாரித்து வைத்திருந்தனர்.

ஒரு ஓரத்தில் பானையில் பழவேற்காடு நண்டு சூப்….! கேட்டாலே நாவில் நீர் ஊறுகிறதே! நேரில் பார்த்தவர்களுக்கு….?

காலை 10.30 மணியளவில் மெரீனா வழியாக சென்றவர்களை இந்த மீன்களின் வாசனை சுண்டி இழுத்தது.

பொதுமக்கள் நண்டு சூப், வறுத்த மீன்களை வாங்கி சுவைத்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரியவகை மீன்களையும் பார்த்து வியந்தனர்.

ஒரு சில மீன்கள்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கண்காட்சியில் சுமார் 60 வகையான மீன்கள் இடம் பெற்று இருந்தன.

100 கிலோ எடை உள்ள சுறா, தேங்காய் பாரை, வஞ்சிரம், செம்படக்கான், பூங்குழல், தேந்தல், கல்கொடுவா, கருக்கான், தோல்பாறை, சீலா, பெலாசி, சிங்எறா, கடல்வாத்து உள்ளிட்ட வகைகள் இடம் பெற்றிருந்தன.

சி.டி. வடிவில் இருந்த சி.டி.மீன், செருப்பு வடிவில் இருந்த செருப்பு மீன் போன்று வித்தியாசமான மீன்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.

ஏரி, குளங்களில்தான் ஜிலேபி ரக மீன்களை பார்த்து இருப்பார்கள். கடல் ஜிலேபி என்ற ரகமும் காட்சியில் இருந்தது.

சாப்பிட்டு ருசி அறியாத அரிய வகை மீன்களும் பொதுமக்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.

மீன்களை ரசித்தும், ருசித்தும் மீனவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் மீனவர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

மீனவர் தினமான இன்று பழவேற்காடு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தமிழிசை முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களுக்கு இனிப்புக்கு பதில் மீன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், எம்.என்.ராஜா, காளிதாஸ், கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், செம்மலர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஏற்பாடு செய்த சதீஸ் கூறும்போது, “தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும் இந்த முறை பெரிய அளவில் நடத்துவதாகவும்” தெரிவித்தார்.

ஆண்டு முழுவதும் மீன் விலைக்கு வாங்கி எங்களின் வாழ்வாதாரத்துக்கு துணை நிற்கும் பொதுமக்களுக்கு எங்களின் (மீனவர்களின்) தினமான இன்று சிறிதளவு மீனை இலவசமாக பரிசளிப்பது மகிழ்ச்சி என்றனர் மீனவர்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply