பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் பட்டியலில் வடகொரியா: டிரம்ப் அதிரடி நடவடிக்கை

கடுமையான பொருளாதார தடைகள், உலகளாவிய எதிர்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் வடகொரியா, தனது அணு ஆயுத திட்டத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. வடகொரியா 6-வது முறையாக அணுக்குண்டு சோதனை நடத்தி முடித்திருப்பதுடன், தற்போது அமெரிக்காவின் உள்பகுதியை தாக்கும் ஆற்றல் கொண்ட ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை யுத்தம் நடந்து வந்தது.

இந்த நிலையில் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிற நாடுகளின் பட்டியலில் வட கொரியாவை சேர்த்து டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது பற்றி டிரம்ப் குறிப்பிடுகையில், “இதை நீண்ட காலத்துக்கு முன்பாக செய்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்த பட்டியலில் வடகொரியா முன்பும் இடம் பெற்றிருந்தது. ஆனால் 2008-ம் ஆண்டு, ஜார்ஜ் டபிள்யு புஷ் அதிபராக இருந்தபோது அந்தப் பட்டியலில் இருந்து வடகொரியா விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போது 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அந்த நாட்டை பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிற நாடுகளின் பட்டியலில் டிரம்ப் சேர்த்திருப்பது, உலக அரங்கை அதிரச்செய்துள்ளது.

இதன் காரணமாக வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.

டிரம்பின் நடவடிக்கை காரணமாக வடகொரியா உலகளவில் பிற நாடுகளிடம் இருந்து தூதரக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்கா மீது வடகொரியா கடும் ஆத்திரம் கொள்ளவும் இந்த முடிவு வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply