தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் அமைப்புடன் கூட்டணி வைக்க தயார்: முஷரப் அறிவிப்பு

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்புடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான முஷரப் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத். கடந்த 10 மாதங்களுக்கு மேலாக வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். விடுதலை ஆன பின்னர் மில்லி கடந்த வாரம் முஸ்லீம் லீக் என்ற பெயரில் கட்சி ஒன்றை துவங்குவதாக அவர் அறிவித்தார். மேலும் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், ஹபீஸ் சயீத்தின் இந்த இயக்கம், பாகிஸ்தானின் தேர்தல் ஆணையத்தில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. 

அதே வேளையில் கடந்த சில தினங்களுக்கு முன், பர்விஸ் முஷரப், தான் ஒரு லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் என தெரிவித்தார். இந்நிலையில், தற்போது தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்புடன் கூட்டணி வைக்க தயார் என முஷரப் தெரிவித்துள்ளார்.

நேற்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை. பாகிஸ்தானில் தற்போது நடந்துகொண்டிருப்பதை தீவிரவாதம் என கூறக்கூடாது. குறைந்தபட்சம் நாமாவது அப்படி அழைக்காமல் இருக்கவேண்டும். அந்த இயக்கங்கள் பாகிஸ்தான் மக்களுக்காக உழைக்கும் அரசு சாரா அமைப்புகளாகும். அவர்கள் தாலிபன்களுக்கோ, அல் கொய்தாவுக்கோ ஆதரவாக செயல்படவில்லை. அதன்பின் நாம் ஏன் அவர்களை தீவிரவாதிகள் என உருவகப்படுத்த வேண்டும்.

தற்போது வரை கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆனால், கூட்டணியில் அவர்கள் இடம் பெற விரும்பினால், நான் அதை வரவேற்பேன்”, என கூறியுள்ளார்.

முன்னதாக, முஷரப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் செயல்பட்டுவரும் 23 அரசியல் கட்சிகள் அடங்கிய பாகிஸ்தான் அவாமி இத்திஹாத் என்கிற மகா கூட்டணியை அமைத்தார். ஆனால், இந்த கூட்டணி நீண்ட காலம் நிடித்திருக்காமல் சில நாட்களிலேயே உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply