ஜெருசலேம் விவகாரம்: டிசம்பர் 13ல் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அவசர மாநாடு

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து விவாதிப்பதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பு மாநாட்டை 13ம் தேதி, துருக்கி அதிபர் எர்டோகன் கூட்டியுள்ளார். கடந்த 1967-ல் ஜெருசலேமின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் கைபற்றியது முதல் அந்த நகரின் உரிமை தொடர்பாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் நிலவி வருகிறது. அரபு நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் கூட, ஜெருசலேம் பாலஸ்தீன தலைநகர் என்பதை ஏற்க வில்லை.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை, ஜெருசலேம் நகருக்கு மாற்றும் உத்தரவை இன்று பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெருசலேம் நகருக்கு தூதரகத்தை மாற்றுவது நிர்வாக வசதிக்காகதான் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ‘‘‘இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றுவது என்பது வரலாற்றை மாற்றியமைக்கும் முயற்சி அல்ல. மாறாக நடைமுறை மற்றும் அரசியல் காரணங்களுக்காகவே இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இஸ்ரேலின் முக்கிய அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஜெருசலேமில் செயல்படும் நிலையில், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் டெல் அவிவ் நகரில் செயல்படுவது சரியாக இருக்க முடியாது. அதேசமயம் இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’’ எனக்கூறினர்.

ஆனால் தூதரகத்தை மாற்றுவதன் மூலம் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்கா அங்கீகரிப்பதாகி விடும் என அரபு நாடுகளின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில் இதுபற்றி விவாதிப்பதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டை, துருக்கி அதிபர் எர்டோகன் கூட்டியுள்ளார்.

இதுகுறித்து எர்டோகனின் செய்தித்தொடர்பாளர் இப்ராஹிம் கூறுகையில் ‘‘இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விவாதிப்பதற்காக டிசம்பர் 13ம் தேதி இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டை அதிபர் எர்டோகன் கூட்டியுள்ளார். இதில் பங்கேற்கும் நாடுகளின் விவரம் பின்னர் தெரிய வரும். ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும்’’ எனக்கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply