சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு

இஸ்ரேல், ஜெருசலேமை தனது தலைநகராக கூறி வருகிறது. ஆனால் இதனை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாமலேயே உள்ளன.ஜெருசலேம் நகரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்களின் புனித தலங்கள் உள்ளன. ஆனால் அங்கு சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலும், பாலஸ்தீனமும் கடந்த 1993-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன.

அதில் ஜெருசலேமின் நிலை பற்றி பேச்சு நடத்தி பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார்.

இதன் மூலம் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த முதல்நாடு என்கிற பெயரை அமெரிக்கா பெற்றுள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்புக்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அந்த நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க அவசர கூட்டத்தையும் அரபு நாடுகள் கூட்டியுள்ளன. இந்த கூட்டம் நாளை மறு நாள் நடக்கிறது. இதில் அமெரிக்காவுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதற்கிடையே டிரம்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க தேசிய கொடும்பாவி எரித்து பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சென்னையிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு எப்போதுமே போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.

டிரம்புக்கு எதிராக தூதரகம் முன்பு போராட்டங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகத்தை சுற்றியுள்ள சாலைகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply