காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி 16–ந் தேதி பதவி ஏற்கிறார்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 16–ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கட்சியின் தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள். எனவே ராகுல்காந்தி போட்டியின்றி காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்திக்காக 89 மனுக்கள் வந்துள்ளன. பரிசீலனையின்போது இவை அனைத்துமே செல்லத்தக்கவை என தெரிந்துள்ளது. எனவே காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியின் மனு மட்டுமே வந்துள்ளதாக இன்று அறிவிக்கப்படுவார். ஆனாலும் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழ் 16–ந் தேதி சோனியாகாந்தி மற்றும் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்படும்’’ என்றார்.

அதன்பின்னர் அன்று காலை 11 மணிக்கு சோனியா காந்தி கட்சி பொறுப்புகளை ராகுல்காந்தியிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைப்பார். தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாடு முழுவதும் இருந்து வந்த பல்வேறு தலைவர்களை ராகுல்காந்தி சந்திக்கிறார். அப்போது அவர்கள் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகுல்காந்தி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றாலும் சோனியா காந்தி, கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பாங்காற்றுவதோடு, சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்வார் என கார்நாடக முன்னாள் முதல்–மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான வீரப்பமொய்லி தெரிவித்து உள்ளார்.

ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:–

கடந்த 2004–ம் ஆண்டு மற்றும் 2009–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களின்போது காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானதில் சோனியாகாந்தியின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் போன்ற சட்டங்களை இயற்றியதிலும் அவருடைய தலைமை பண்பு போற்றுதலுக்குரியது.

அவருடைய பதவிக்காலத்தில் காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சி அமைத்து இருக்கிறது. அவர் கட்சியின் தலைவராக இல்லாதபோதிலும், கட்சியில் முக்கிய பங்கு வகிப்பார். அவர் ராகுல்காந்திக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கட்சிக்கும் தாயாக பார்க்கப்படுகிறார். எனவே அவர் தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply