ஆறுகளை பாதுகாப்பதாக கூறி ஏழை மக்களை சென்னையை விட்டு வெளியேற்றுகிறார்கள்: மேதா பட்கர்

ஆறுகள் மீட்புக்கான சமூக ஆய்வு அறிக்கையை மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு தேசிய ஆலோசகரும், சமூக சேவகியுமான மேதா பட்கர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2015-ம் ஆண்டு வெள்ளத்தை காரணம் காட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதி ஆற்றங்கரையோரங்களில் குடியிருக்கும் ஏழை-எளிய மக்களை வலுக்கட்டாயமாக அகற்றி வருகிறார்கள். அவர்களை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து தொலைவான பகுதியில் இருப்பிடம் அமைத்து கொடுக்கிறார்கள்.

ஆறுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நிலத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆறுகளில் கலக்கும் சாக்கடை நீரினால் தான் 95 சதவீதம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆறுகளை காப்பாற்றுவதில் அரசு அக்கறை காட்டவில்லை.

ஆற்றங்கரையோரங்களில் வசித்த ஏழை-எளிய மக்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் கொடுப்பது வளர்ச்சி என்று நினைக்கிறார்கள். அவ்வாறு வெளியேறாத மக்களிடம் ரேஷன் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காது என்று போலீசார் மூலம் மிரட்டி அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

கரையோரங்களில் இருந்து அகற்றி சென்னை நகரை விட்டு வெளிப்புறத்தில் அவர்களுக்கு இருப்பிடம் வழங்குவதால் அன்றாட வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. உண்மையில் இந்த மக்களின் வாழ்வாதாரம் நகரின் முக்கிய பகுதிகளில் தான் இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

எனவே ஆற்றங்கரையோரங்களில் இருந்து நியாயமான காரணங்களுக்காக அகற்றப்படும் மக்களுக்கு நகரின் உள்ளேயே அரசு நிலங்களில் வீடுகள் கட்டி ஒதுக்கி தரவேண்டும். இதுபோல் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் எங்கு இருக்கிறதோ? அங்கு அவர்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply