தேர்தல் முடிவை வைத்து பிரதமரை மாற்ற கோருவது அரசியலமைப்புக்கு முரண்

தமிழீழம் மலர்வதாக இருந்தால் தாமரை மொட்டு கட்சியின் செயற்பாடே அதற்குக் காரணமாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் சாடினார். நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கீழ்த்தரமான முறையில் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் போலியான, தீங்கிழைக்கும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்ததாக அவர் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை குறித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

அரசியலமைப்புத் தீர்வைக் கொண்டுவந்து உள்ளூராட்சித் தேர்தலின் ஊடாக தமிழீழம் மலரப் போவதாகவும், தமிழீழத்தை ஏற்படுத்துவதற்கான சர்வஜன வாக்கெடுப்பாக உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார். இது அப்பாவி மக்களை ஏமாற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்ட தவறான பிரசாரங்களாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

“எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிக்கப்படாத, பிளவுபடுத்தப்படாத, ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு என்பதையே சுட்டிக்காட்டியிருந்தோம். வடக்கு, கிழக்கில் நாம் முன்னெடுத்திருந்த பிரசாரங்களில் எந்தவொரு இடத்திலும் பிரிவினை பற்றிப் பேசியிருக்கவில்லை” எனவும் சம்பந்தன் கூறினார்.

“தமிமீழம் மலர்வதாக இருந்தால் அது தாமரை மொட்டினால்தானாக இருக்கும்” என்றார்.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து அரசியலமைப்பு சபையில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மஹிந்த ஆதரவு தரப்பினர் சபையில் அதற்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு, தேர்தல் காலத்தில் தமிழீழம் மலரப் போவதாக பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். இது மக்களை ஏமாற்றும் போலிப் பிரசாரமாகும். அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதிகளின் காலத்தில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. சர்வகட்சிக் குழுக் கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றியிருந்த அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, ஆகக் கூடிய அதிகாரப் பகிர்வொன்றுக்குச் செல்லத் தயார் எனக் கூறியிருந்தார். இவ்வாறான நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் முடிவைக் கொண்டு பிரதமரை மாற்றுமாறு கோருவது அரசியலமைப்புக்கு முரணானது. அரசியலமைப்பின் எந்தவொரு இடத்தில் அதற்கான ஏற்பாடுகள் இல்லை.

இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கு எதிராக 55.3 வீதமான வாக்குகள் கிடைத்துள்ளன. பொதுஜன பெரமுனவுக்கு 44.69 வீதமான வாக்குகள் கிடைத்திருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் 32.61 வீத வாக்குகள், ஐ.ம.சு.முவின் 8.90 வீத வாக்குகள், சுதந்திரக் கட்சியின் 4.48 வீத வாக்குகள், ஜே.வி.பியின் 4.32 வீத வாக்குகள், இலங்கை தமிழரசுக் கட்சியின் 4.07 வீத வாக்குகள் என்பவற்றை ஒன்றிணைத்துப் பார்க்கும்போது பொது ஜன பெரமுனவைவிட அதிகமான வாக்குகளே கிடைத்துள்ளன. மஹிந்த ராஜபக்‌ஷவினால் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளைத் தமது அரசியல் இலாபத்தை அடைவதற்குப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply