ஐ.ம.சு.முவிடமிருந்து எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வது தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் கிடைக்க வில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுதொடர்பில் தமக்கு எந்தவொரு கடிதமோ அல்லது அறிவித்தலோ கிடைக்கவில்லையென்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொடர்ந்தும் இருக்காது என பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரமாகியிருந்ததாக கூட்டு எதிர்க் கட்சி எம்.பி. தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியபோது அதற்குப் பதிலளிக்கையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும் என இதன்போது சபை முதல்வரும் உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் இரண்டு தரப்புக்கள் இருப்பதாகவும் எனினும் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லையென்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஒருசில பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கம் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தினேஷ் குணவர்தன எம்.பி. எழுப்பிய மேற்படி ஒழுங்குப்பிரச்சினை காரணமாக சபையில் சர்ச்சைநிலை ஏற்பட்டது. தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறையில் இல்லையென்றும் பாராளுமன்ற கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் அமைச்சர்கள் மீண்டும் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த தினேஷ் குணவர்தன எம்.பி. எமது அமைச்சர்கள் குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன். ஏனெனில், தேசிய அரசாங்கம் இல்லாதுபோனால் அமைச்சர்கள் 30ஆக குறைந்துவிடுவார்கள். தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவ்வாறு அவர் கூறுகையில், இவ்வாறு செயற்படமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தினேஷ் குணவர்தன பத்திரிகைகளை வாசித்தே கருத்துக்களை முன்வைக்கிறார்.

அதற்கு பதில் வழங்க உங்களால் முடியாது. தேசிய அரசாங்கத்தில் இரண்டு தரப்புக்கள் உள்ளன. நாம் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்திலுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply