சுமத்ரா தீவில் எரிமலை சீற்றம் : விமான நிறுவனங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஒரு எரிமலை அதிக வெப்பத்துடன் சாம்பலை வெளிப்படுத்தி வருவதால் அப்பகுதியில் விமானங்கள் இயக்கவேண்டாம் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்தோனேசிய நிலப்பகுதி நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. சில சமயங்களில் அவை ஆக்ரோஷமாக வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை வெளிப்படுத்தும். இதில் உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது.

அவ்வகையில் தற்போது சுமத்ரா தீவில் உள்ள “சினபங் எரிமலை” தற்போது கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று முதல் அதிக வெப்பத்துடன் கூடிய சாம்பலை வெளிப்படுத்தி வருகிறது. விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்துள்ள இந்த புகை மற்றும் சாம்பல் எரிமலையின் சுற்றுப்புற பகுதிகளில் 16000 அடி தூரம் வரை பரவியுள்ளது. எரிமலையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என்பதால் விமான நிறுவனங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கக்கூடாது என அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள பிராந்திய எரிமலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply