ஐ.தே.க − ஐ.ம.சு.மு இணக்கப்பாட்டை ஏற்குமாறு சட்ட ஆலோசனை

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு தரப்பினரும் தேசிய அரசில் தொடர்வதாக அறிவித்திருப்பதால் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு தனக்கு சட்ட ஆலோசனை கிடைத்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். எனவே, இந்த விடயத்தை தொடர்ந்தும் இழுத்தடிப்பதில் எந்தப் பயனும் இல்லையென்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் முடிந்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய தினேஷ் குணவர்தன எம்.பி, தேசிய அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒழுங்குப் பிரச்சினை முன்வைத்து கருத்துத் தெரிவித்த தினேஷ் குணவர்தன எம்பி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது பல கட்சிகளைக் கொண்ட கூட்டணி என்பதை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டே அங்கீகரிக்கப்பட்டது. இதனை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் உள்ளிட்ட பலர் தேசிய அரசாங்கம் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினர்.

அப்படி ஒப்பந்தமொன்று இருந்தால் மாத்திரமே தேசிய அரசாங்கம் ஏற்புடையதாகும். அவர்களுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் ஆவணம் சபாநாயகரான உங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையாயின் 50ற்கும் அதிகமான அமைச்சர்கள் இருப்பது ஏற்புடையதாக அமையாது. அது மாத்திரமன்றி ஐ.ம.சு.முவில் உள்ள ஏனைய உறுப்பினர்களின் உரிமையையும் இல்லாமல் செய்வதாக அமையும். தேசிய அரசாங்கம் குறித்து இரகசிய தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தால் உங்களுக்காவது அந்த ஒப்பந்தம் கையளிக்கப்பட்டு, முன்னணியில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அதனை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். இதனை செய்யாவிட்டால் அது அரசியலமைப்பை மீறுவதாக அமையும். எனவே இது பற்றி தெளிவான தீர்மானமொன்றை அறிவிக்க வேண்டும் என சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இது தொடர்பில் நான் சட்ட ஆலோசனை பெற்றுக் கொண்டிருந்தேன். சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தேசிய அரசாங்கத்தில் தொடர்கிறோம் என்ற நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெளிவாக அறிவித்திருப்பதால் இந்த விடயத்தை தொடர்ந்தும் இழுத்தடிப்பதில் பலனில்லை. அவர்களின் இணக்கப்பாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு தனக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளது. சபாநாயகர் என்ற ரீதியில் அதனை ஏற்றுக் கொள்ளவேண்டியிருப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல,

தேசிய அரசாங்கம் தொடர்பில் பிரதமரும், ஐ.ம.சு.மு செயலாளரும் அறிவித்துள்ளனர். மீண்டும் மீண்டும் இந்தப் பிரச்சினையை எழுப்புவது நியாயமற்றது என்றார்.

ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவித்த டலஸ் அழகப்பெரும எம்.பி, குறிப்பிடுகையில், இவ்விடயத்துக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று அரசியல் ரீதியான பார்வை. அதற்கே பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் பதில் வழங்கியுள்ளன. எனினும், அரசியலமைப்பு ரீதியான பார்வையொன்றும் உள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அந்த ஆவணம் சமர்ப்பிக்கப்படுவதே அரசியலமைப்புக்கு ஏற்புடயதாகும் என்றார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த நளின் பண்டார ஜயமஹா எம்.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியைப் பொறுப்பேற்கப் போவதாகவும், அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வாவை பிரதமராக்குவதற்கு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காது ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஒரு வாரத்துக்கு முன்னர் கூறியிருந்தார்கள்.

எனினும், அவர்களுடைய இந்த முயற்சி தோல்வியடைந்ததால் தற்பொழுது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

அரசியல் வங்குரோத்து நிலையை மறைப்பதற்கு நாளாந்தம் தேசிய அரசாங்கம் குறித்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பி வருவதாகக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply