கட்சியின் ஒருமைப்பாட்டினை பாதுகாக்க கரு ஜயசூரியவுக்கு விசேட பொறுப்பு : ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளவர்கள் கட்சிக்குள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பலவாறான கருத்துக்களைக் கொண்டுள்ள போதும் கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் அதனை கட்டியெழுப்பவும் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு தான் விசேட பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். லண்டனில் ஐக்கிய தேசியக் கட்சி கிளை காரியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்குள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது குறித்து கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னை வந்து சந்தித்த விடயத்தையும் அதன்போது பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் கருஜயசூரிய தனக்கு அறிவித்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தான் வெளிநாடு சென்றுள்ளதால் கட்சியில் இடம்பெறும் விடயங்கள் குறித்து தொலைபேசி ஊடாக தனக்கு அறிவிக்குமாறு கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி கிளை காரியாலயங்களை மேம்படுத்தி 2012 ஆம் ஆண்டளவில் வலுவான சர்வதேச வலையமைப்பாக அவற்றை மாற்றவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply