அ.தி.மு.க. விலகினாலும் இந்தியக் குழு இலங்கை வரும் : வெளிவிவகார அமைச்சு

தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் விலகிக் கொண்டாலும் கூட, இந்தியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் இலங்கைக்கான பயணம் திட்டமிட்டபடி இடம்பெறும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

திட்டமிட்டபடி வரும் 16ஆம் திகதி இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இலங்கை வருமென இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரத் திசாநாயக்க சீன செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நல்லெண்ணப் பயணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், இந்தியக் குழுவினர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியைச் சென்று பார்வையிடவுள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து அவர்கள் உரையாடுவர்.

இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணம் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிவதற்கு முக்கியவத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தமது கட்சியின் சார்பில் நியமித்த பிரதிநிதியை இந்தக் குழுவில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளார்” என்றார்.

இந்திய தரப்பில்…

அதே வேளை, இந்திய எம்.பிக்களின் இலங்கைப் பயணம் கைவிடப்படுமா எனப் பரவலாகக் கேள்வி எழுப்பப்படுகிறது.

அ.தி.மு.க. தனது பிரதிநிதியை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டதால், இலங்கை செல்லவுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவின் பயணம் ரத்து செய்யப்படலாம் அல்லது ஒத்தி வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இலங்கை வரும் இந்திய எம்.பிக்கள் குழுவில் இலங்கைத் தமிழர்கள் பால் தீவிரமான பற்றோ அல்லது ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து கவலையோ கொள்வோர் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

குழுவில் ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற ஈழத்ந்தமிழர்களின் மீது பற்று கொண்ட எவருமிலர். மாறாக ஈழத் தமிழர்களுக்காக பெரிய அளவில் எதுவும் இதுவரை செய்திராத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐவர் உள்ளனர் எனவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

சுஷ்மா சுவராஜ் போன்ற மூத்த தலைவர்களுக்கே கூட சமீபகாலத்தில்தான் இந்தப் பிரச்சினை குறித்து அரை குறையாக தெரிய வந்தது.

மேலும் இந்தக் குழுவிலிருந்து தற்போது அ.தி.மு.கவும் விலகி விட்டது. இதனால் மத்திய அரசு குழப்பமடைந்துள்ளது. தற்போது இலங்கையைப் பொறுத்தவரை இந்தியா வேண்டாத விருந்தாளியாக மாறி விட்டது. இந்த குழப்பமான சூழ்நிலையில் எம்.பிக்கள் குழுவை அனுப்புவது குறித்து மத்திய அரசும் கூட யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply