பொன்சேகாவுக்கு ஜனாதிபதியால் அளிக்கப்பட்டுள்ள சலுகை பொதுமன்னிப்பு அல்ல

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதியால் அளிக்கப்பட்டுள்ள சலுகை பொதுமன்னிப்பு அல்ல என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்தின் 34 ஆவது பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட்டால், ஒருவர் மீதான குற்றச்சாட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளி என்று கருதப்பட்டு அளிக்கப்பட்ட தண்டனை, அதனால் ஏற்படும் தகுதி நீக்கம் ஆகிய அனைத்துமே களையப்படும், என்றும் ஆனால் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது அரசியல் சாசனத்தின் 34 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்படும் பொதுமன்னிப்பு அல்ல எனவும் சரத் சில்வா சுட்டிக்காட்டுகிறார்.

ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளதை நிபந்தனையற்ற ஒரு முழுமையான மன்னிப்பு என்று கூறுவது கூட தவறானது.

அரசியல் சாசனத்தின் பிரிவு 34-1(டி)யின்படி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையோ அல்லது அதில் ஒரு பகுதியையோ ஜனாதிபதி ரத்து செய்யலாம்.

அதன் அடிப்படையில் வெள்ளைக் கொடி வழக்கில், உயர்நீதிமன்றத்தால் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி முற்றாக ரத்து செய்துள்ளார் என்று கூறும் முன்னாள் தலைமை நீதிபதி, சரத் பொன்சேகா குற்றவாளி என்று கூறி நீதிமன்றம் விதித்த மூன்றாண்டுகள் தண்டனையை ஜனாதிபதி ரத்து செய்துள்ளாரே தவிர அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் கூறிய தீர்ப்பு அப்படியே உள்ளது என்றும் இந்த விஷயத்தில் அவருக்கு மன்னிப்பு ஏதும் வழங்கப்படவில்லை எனவும் கூறுகிறார்.

ஆனால் இராணுவத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட ஹைகார்ப் வழக்கு விவகாரத்தில் அவர் இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலான தண்டனையின் ஒரு பகுதியைத்தான் ஜனாதிபதி ரத்து செய்துள்ளார் என்றும், எனவே இரு வழக்குகளில் அவர் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டுள்ளார் எனவும் சரத் சில்வா  தெரிவித்தார்.

இந்த ஹைகார்ப் வழக்கின் தீர்ப்பின் காரணமாகத்தான் சரத் ஃபொன்சேகா தமது சிவில் உரிமைகளை இழக்கும் நிலை ஏற்பட்டது.

அந்த வழக்கில் இராணுவ நீதிமன்றம் அவருக்கு இரண்டரை வருடம் சிறை தண்டனை விதித்தது.
இரட்டை நிலைப்பாடு?

இராணுவச் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு இப்படியான சலுகையை வழங்க முடியாது என்று அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் கருத்துக் கூறியதாக தன்னால் அறிய முடிகிறது என்றும், இருந்தபோதிலும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தண்டனைக் காலத்தை ஜனாதிபதி குறைத்துள்ளார் என்றும் சரத் என் சில்வா கூறுகிறார்.

மேலும் சரத் பொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட சிவில் உரிமைகள் அப்படியே நிலுவையில் இருக்கும்படியும் ஜனாதிபதி பார்த்துக் கொண்டுள்ளார் எனவும் அவர் கூறுகிறார்.

இதன் மூலம் அவர் தேர்தல்களில் போட்டியிட முடியாத ஒரு நிலை தொடரவே செய்யும் என்றாலும், சரத் பொன்சேகாவுக்கு இதர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் உரிமைகள் உட்பட இதர உரிமை கிடைக்கும் எனவும் சுட்டிக்காட்டுகிறார் இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply