இலங்கை ஜனாதிபதி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி விட்டார் - கருணாநிதி புலம்பல்

வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் இராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது என்று அந்த இலங்கை ஜனாதிபதி சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப் போல உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி :- இலங்கைத் தமிழர்களுக்கு “தனித் தமிழ் ஈழம்” அமைந்தால்தான் விடிவு ஏற்படும் என்று நீங்கள் சொல்வதை நிரூபிப்பதைப் போல தொடர்ந்து அங்கே தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுவதாக இன்று கூட ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

கருணாநிதி :- அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 200 நாடுகளில் மனித உரிமை நிலை குறித்த 2011ஆம் ஆண்டுக் கான அறிக்கையை வாஷிங்டன் நகரில் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், 44 பக்கங்களுக்கு இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாம். குறிப்பாக, “தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் சிங்கள இராணுவம் மற்றும் அரசு ஆதரவு குழுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு கொலைகளை நிகழ்த்தி வருகின்றன.

இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன. அரசியல் நோக்கம் கருதி இந்தக் குழுக்கள் இயங்குகின்றன. விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் என கருதப்படுவோர் துன்புறுத்தப்படுகிறார்கள். ஏராளமானவர்கள் காணாமல் போவது இங்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது. முந்தைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் காணாமல் போயுள்ளனர். இதற்கு அரசு தரப்பில் எந்தப் பொறுப்பும் ஏற்கப்படவில்லை. சிங்கள இராணுவக் கண்காணிப்பில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் துன்பப்படுத்தப்படுகின்றனர்.

அரசு அதிகாரிகளால் பொது மக்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படுவோரில் பலர் விசாரணையின் போது மரணம் அடைந்துள்ளனர். நீதி விசாரணையின்றி ஏராளமான தமிழர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். உண்மையான நீதி மறுக்கப்படுவது பெரும் பிரச்னையாக உள்ளது.

தமிழர்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிடுகிறது. பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது. கருத்து சுதந்திரம், ஒன்று கூடும் உரிமை, நடமாடும் சுதந்திரம் போன்றவற்றிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளது. சிறுவர்களை கடத்துதல், தவறாகப் பயன்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இங்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மனித உரிமை மீறல்களால் எண்ணிலடங்காத தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக இன்று ஏடுகளில் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவும், பிரிட்டனும் தெரிவித்துள்ள இப்படிப் பட்ட கருத்துக்களுக்கிடையே இலங்கை ஜனாதிபதி, “வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் இராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது” என்று சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது. இதையெல்லாம் பற்றி விவாதித்து முடிவெடுக்கத்தான் “டெசோ” மாநாட்டினை விரைவிலே கூட்டுவதாக அறிவித்திருக்கிறோம். என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply