எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் தனிக்கட்சி தொடங்குகிறார் தீபா

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவரது அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளும் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும் கூடி வருகின்றனர். அப்போது அவர்கள் தீபா, பயப்படாமல் அரசியலுக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

தொண்டர்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள தீபா, தனது வீட்டு முன்பு பெரிய பெட்டி ஒன்றையும் வைத்துள்ளார். அதில் அவரது ஆதரவாளர்கள் தங்களது கருத்துக்களை எழுதி போட்டு வருகிறார்கள்.

காலையில் தீபாவின் கணவர் மாதவன் தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார். மாலையில் தொண்டர்களை சந்திக்கும் தீபா, அவர்கள் முன்பு சிறிது நேரம் உரையாற்றுகிறார். இது கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அரசியலில் குதிக்க தீபா முடிவு செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார். எம்.ஜி.ஆர். பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி முதல் எனது அரசியல் பயணம் தொடங்கும் என்று தீபா அறிவித்துள்ளார்.

அன்று காலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு தனது அரசியல பயணத்தை தீபா தொடங்குகிறார். தற்போது தீபா பெயரில் பேரவைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவும் தீபா பேரவைக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பேரவைகளை பல்வேறு மாவட்டங்களிலும் பலர் தனித்தனியாக தொடங்கி உள்ளனர். இவைகளையெல்லாம் ஒருங்கிணைத்து 17-ந்தேதி அன்று தீபா தனிக் கட்சியை தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் பயணம் பற்றி அறிவிப்பு வெளியிட்ட தீபா அது பற்றிய தகவல்களை விரிவாக விளக்கி கூறவில்லை. தனது அரசியல் பயணம் எப்படி இருக்கும்? என்பதையும் அவர் தெளிவுபடுத்தவில்லை.

எனவே வருகிற 17-ந்தேதி அன்று அரசியல் பயணம் பற்றி அதிரடியாக அறிவிப்புகளை தீபா வெளியிட உள்ளார். அதன்பின்னர் அவர் மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தனக்கு ஆதரவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். ‘‘ஜெயலலிதாவின் வழியில் அரசியல் பயணத்தை தொடர்வோம்’’ என்கிற சூளுரையுடன் தீபா தனது அரசியல் பாதையை வகுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

தீபாவின் அரசியல் பணத்தை எதிர்பார்த்து அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினரும், அவரது ஆதரவாளர்களும் காத்திருக்கிறார்கள். இதனை உறுதிபடுத்தும் விதத்தில் தீபாவின் வீட்டு முன்பு அவர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக திரண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தீபா தனிக்கட்சி தொடங்குவது பற்றி அவரது கணவர் மாதவன் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பிறந்தநாளில் தீபா தனிக் கட்சி தொடங்க உள்ளார். கட்சியின் பெயர், கொடி ஆகியவை பற்றி அவரே பின்னர் அறிவிப்பார். கடந்த ஒருமாதமாக தீபாவை ஆதரித்து தினமும் வீட்டு முன்பு பலர் திரண்டு கொண்டே இருக்கிறார்கள். அப்படி வருபவர்கள் தங்களது பெயர் மற்றும் முகவரியை போன் நம்பருடன் பதிவு செய்து வருகிறார்கள். இதுவரை 2 லட்சம் பேர் வரை தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply