கூட்டமைப்பு உடைந்து போனால் மகிழ்சியடைவது யார்?:கோகுலகுமார் அஞ்சலா

கூட்டமைப்பு உடைந்து போனாலோ, கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறிச் சென்றாலோ தமிழ் மக்கள் மகிழ்சியடைய மாட்டார்கள். ஆனால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள், என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு மருதமடு வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வேட்பாளர் கோகுலகுமார் அஞ்சலா தெரிவித்தார்.

வவுனியா விளக்கு வைத்தகுளம் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே வேட்பாளர் அஞ்சலா இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகின்ற போது, சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தவா நாம் போராடினோம்? உயிர்களை இழந்து தியாகங்களை செய்தோம் எமக்குள் ஒற்றுமை குலைந்தால் எமது உரிமைப் போராட்டத்தை வென்றெடுக்க முடியுமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது மிகப் பெரியதொரு கூட்டுக்குடும்பம். எமக்குள்ளே ஏற்படும் பிரச்சனைகளை பேசி தீர்க்கமுடியாவிட்டால் எப்படி எம்மால் அரசாங்கத்தோடு பேசி எமது மக்களின் பிரச்சனைகளை தீர்க்கமுடியும்! தனித்தனியாக பிரிந்து நிற்பது நாம் எமது இனத்துக்கு செய்கின்ற மாபெரும் துரோகமாகும்.

கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் ஒற்றுமைக்கு வாக்களியுங்கள் உரிமைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த 18 வருடங்களுக்கு மேலாக எமது மக்களிடம் வாக்கு கேட்ட வாய்களெல்லாம் இப்போது கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்கச் சொல்லும் வாய்களாகிவிட்டது. எதுக்காக?

விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த ஒரு கட்சியோடு, வன்னியிலே இறுதி யுத்தத்திலே ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போகவும், கொல்லப்படவும் காரணமாகிப்போன ஒரு கட்சியோடு, ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வெறுத்த, நிராகரித்த ஒரு கட்சியோடும் அதன் தலைவரோடும் கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்று இணைந்திருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளவோ, ஆதரிக்கவோ முடியாது. சிங்கள மக்களையும், சிங்கள அரசாங்கத்தையம் மகிழ்ச்சிப்படுத்த நமது ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது. அப்போது விடுதலைப் புலிகள் பலமாக இருந்தபோதும், இப்போது கூட்டமைப்பு பலமாக இருக்கின்றபோதும் நாம் வெல்ல முடியவில்லை என்றால் எப்போதுமே நாம் வெல்லமுடியாது.

எனவே பிரிந்தவர்கள் எல்லாம் மீண்டும் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள வேண்டும். எமது மக்கள் அதனைத்தான் எதிர்பார்க்கின்றனர். கூட்டமைப்புக்கு மக்கள் போடும் வாக்குகள் பிரிந்தவர்களை மீண்டும் வரவழைக்கும் வாக்குகளாக அமைய வேண்டும். தேர்தல் முடிவுகள் அவர்களின் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.

கூட்டமைப்பின் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கைதான் நான் கூட்டமைப்பு வேட்பாளராவதற்கு காரணம். என்னால் வேறு எந்தக் கட்சியையும் தெரிவு செய்யமுடியாது.

மக்கள் பக்கமுள்ள கட்சியோடு இணைந்து உரிமைக்கும், அபிவிருத்திக்கும் குரல்கொடுக்க நீங்கள் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து எம்மை பலப்படுத்துங்கள். 25க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட மிகப் பின்தங்கிய மருதமடு வட்டாரத்தில் இருந்து கடந்த பிரதேச சபை நிர்வாகத்தில் யாரும் இல்லாதிருந்த குறையை என்னால் நீக்கமுடியும் என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply