அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில் அங்கு கென்டக்கி மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன. அங்கு பெயிண்ட்ஸ் வில்லே என்ற நகருக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு நடந்து உள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்து 2 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. அடுத்த சில நிமிடங்களில், பெயிண்ட்ஸ் வில்லேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

அங்கு போலீசார் விரைந்தபோது, அந்த துப்பாக்கிச்சூட்டினை நடத்திய நபர் உள்பட 3 பேர் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர். இந்த இரு சம்பவத்தையும் ஒரே நபர்தான் நடத்தி இருப்பார் என்று போலீசார் யூகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதியின் ஷெரீப் பிரைஸ் கூறும்போது, “இது பயங்கரமான படுகொலைகள் ஆகும். ஒரே நபரின் வன்செயலால் 4 உயிர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை தரும் நிகழ்வு ஆகும். நான் 34 ஆண்டுகளில் பார்த்த மிக மோசமான வன்செயல் இதுதான்” என்று குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிச்சூடுகளை ஜோசப் நிக்கெல் என்பவர்தான் நடத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது. எனினும் அவரைப்பற்றிய வேறு தகவல்கள் இல்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்முடிவில்தான் அடுத்தடுத்து நடந்த இந்த துப்பாக்கிச்சூடுகளின் பின்னணி என்ன என்பது தெரிய வரும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply