பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை 200 ஆனது

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது.இந்த சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது.

அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

உள்ளூர் ஊடகத்தில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, அணை விபத்தில் உயிரிழப்பு 188 ஆக உயர்ந்தது. மேலும், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் என பலரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 108 பேர் மாயமாகி உள்ளனர் எனவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply