தங்கள் நாட்டு வான்எல்லையை பாதுகாக்க துருக்கிக்கு உரிமை உள்ளது : ஒபாமா

obamaதுருக்கி அரசுக்கு தங்கள் நாட்டு வான்எல்லையை பாதுகாக்கும் உரிமை உள்ளது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். சிரியாவில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த ரஷிய நாட்டுப் போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதியின் அருகே நேற்று காலை வழிமறித்து சுட்டு வீழ்த்தியது.

 

துருக்கி நாட்டின் வான்வழி கட்டுப்பாட்டு அதிகாரிகளின் எச்சரிக்கையையும்மீறி, ஐந்து நிமிடங்களில் பத்து முறை தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததால் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது.

 

இந்நிலையில், இதுதொடர்பாக வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தங்கள் நாட்டு வான்எல்லையை பாதுகாக்கும் உரிமை துருக்கி அரசுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

’ரஷியாவுக்கு சொந்தமான போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது தொடர்பான இதர தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. விரைவில், துருக்கி அதிபருடன் பேசி நிலைமையை அறிய இருக்கிறேன். ஆனால், தற்போதைய நிலவரப்படி எல்லா நாடுகளைப் போல தங்கள் நாட்டு தரை எல்லையையும், வான்எல்லையையும் பாதுகாக்கும் உரிமை துருக்கிக்கும் உள்ளது.

 

சிரியாவில் துருக்கி உள்ளிட்ட சிலநாடுகளின் ஆதரவைப் பெற்ற மிதவாதப் போராளிகளுக்கு எதிராகவும், அங்குள்ள ஆட்சிக்கு ஆதரவாகவும் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்திவரும் ரஷியாவின் போர் விமானங்கள் துருக்கி நாட்டு எல்லைக்கு வெகு நெருக்கமாக இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகின்றது.

 

எனினும், இந்த சம்பவத்தின் மூலம் துருக்கி-ரஷியா இடையில் மேற்கொண்டு பிரச்சனைகள் தலைதூக்காமல் இருக்க வேண்டும். ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படையில் ரஷியாவும் இணைய வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பமாக உள்ளது’ என ஒபாமா கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply