பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு பாரிய களங்கம்

karuமோதல் சம்பவத்துடன் தொடர்புடைய உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவிருப்பதாக சாபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சபையில் அறிவித்தார்.மேற்படி சம்பவத்தினால் பாராளுமன்றத்தின் உயரிய தன்மைக்கும் அபிமானத்துக்கும் பெரும் களங்கம் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க பணித்துள்ளதாகவும் கூறினார்.சபை நடுவில் மஹிந்த ஆதவு அணிக்கும் ,ஆளும் தரப்பு எம்பிக்களுக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பில் தனது தீர்ப்பை அறிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்:

இன்றையதினம் (நேற்று) பாராளுமன்றத்தில் மக்கள் முறைப்பாடு முன்வைக்கப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்புத் தொடர்பாக தினேஷ் குணவர்த்தன கேள்வியெழுப்பினார். இதற்கு பிரதமர் முழுமையான பதிலை வழங்கினார். பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் விசேட அனுபவம் உள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலதிக விளக்கம் அளிப்பார் என பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சரத் பொன்சேகா குறித்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்த தயாரானபோது சில எம்.பிக்கள் சபை நடுவிற்குள் வந்து குழப்பத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக எம்.பிக்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இந்த சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை நான் தற்காலிகமாக இடைநிறுத்தினேன். பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்த விசேட குழுவின் அவசர கூட்டமொன்றை நான் உடனடியாகக் கூட்டினேன்.

இந்த சம்பவம் குறித்து இங்கு ஆழமாக ஆராயப்பட்டது. இதில் கலந்துகொண்ட சகல உறுப்பினர்களும் இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதி சபாநாயகரையும் குழுக்களின் பிரதித் தலைவரையும் நியமித்துள்ளேன். அவர்கள் இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து உடனடியாக எனக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர். அந்த அறிக்கை கிடைத்தவுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புள்ள எம்.பிக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒழுக்கக் கோவையொன்றை தயாரிப்பது குறித்து நான் கடந்த பாராளுமன்ற அமர்வில் எம்.பிக்களை அறிவூட்டியிருந்தேன்.

இன்றைய தினம்(நேற்று) இந்த பாரதூரமான சம்பவம் நடைபெற்ற சமயத்தில் கலரியில், பொதுமக்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவர்களும் பெருமளவில் அமர்ந்திருந்தனர்.

இதன் மூலம் பாராளுமன்றத்தின் உயரிய தன்மைக்கும் அபிமானத்துக்கும் பெரும் களங்கம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் காயமடைந்துள்ளதோடு ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பாராளுமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் சபையில் நடைபெற்றதால் தொடர்ந்தும் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது உகந்ததல்ல என தீர்மானித்துள்ளேன். அதனால் பாராளுமன்றத்தை அடுத்த நாள்வரை ஒத்திவைக்குமாறு அறிவிக்கிறேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply