இடர்முகாமைத்துவ நடவடிக்கைகளில் பாரிய குறைபாடுகள்

ranilஇடர்முகாமைத்துவ நடவடிக்கைகளில் குறைபாடுகள் காணப்பட்டன. அவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக புதிய சட்டம் அமுல்படுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெள்ளம் வடிந்துவரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நஷ்டஈடு வழங்க இருப்பதாக குறிப்பிட்ட அவர் சில பிரதேசங்களில் வீடுகள் கட்டுவதற்கு தடைபோட உள்ளதாகவும் கூறினார். அண்மையில் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

 

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இறந்த மற்றும் சொத்து செல்வங்கள் இழந்த மக்களுக்காக எமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரநாயக்க பிரதேசத்தில் எதிர்பாராத விதத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பலர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அமைச்சர்கள் கபீர் ஹாசிம், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய போன்றோர் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டுகின்றேன்.

 

களனி கங்கையின் இரு மருங்கிலும் வாழும் மக்களுக்கு வெள்ளத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பாரிய சேதத்தை நாம் கண்டிருக்கிறோம். இதனால் நாமிருந்த கொலன்னாவ பூர்வீக இடத்திலிருந்து கொழும்பு வர நேரிட்டது. நடைமுறைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன. இடர்முகாமைத்துவ செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. இடர்முகாமைத்துவ நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் புதிய சட்டங்களை அமுல்செய்ய வேண்டியுள்ளது.

 

பொலிஸார், இராணுவம், தொண்டர் அமைப்புக்கள், வெளிநாடுகள், தனிநபர்கள் என சகல தரப்பினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள். மத ஸ்தலங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உதவி வழங்கப்பட்டது.

 

வெள்ளம் வடிந்து வரும் நிலையில் முதலில் நஷ்டஈடு வழங்க வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்ப்டடுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

 

அரநாயக்கவில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மக்களுக்கு வாழ முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனர்த்தம் ஏற்படக்கூடிய ஏனைய பிரதேசங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

களனி கங்கை இரு மருங்கிலும் உள்ள குடியேற்றங்கள் தொடர்பில் குறைபாடுகள் உள்ளன.

 

களனி கங்கை இரு மருங்கிலும் பியகம, மல்வானை வரை சிறு வியாபாரிகள் பெருமளவு உள்ளனர். அவர்களுக்கு உதவி வழங்கி துரிதமாக தமது வியாபாரங்களை ஆரம்பிக்க உதவி வழங்கப்படும்.

 

சில பிரதேசங்களில் வீடுகள் நிர்மாணிக்கப்படுவதை தடுக்க அல்லது மாற்ற நேரிடும். ஜயவர்த்தனபுர கோட்டை பிரதேசத்தில் நீர் தேங்குவதற்காக 1000 ஏக்கர் நிலப்பிரதேசம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது 500 ஏக்கர் நிலமே எஞ்சியுள்ளது. இடர்முகாமைத்துவத்துக்கு உரிய திட்டங்கள் உருவாக்க வேண்டும்.

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு எதிர்த்தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

 

முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் கூட பங்களித்தார்கள். அது தொடர்பில் சகலருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவோம் என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply