கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கொடநாடு எஸ்டேட். இங்குள்ள பங்களாவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக பயன்படுத்திவந்தார்.

இந்நிலையில், கொடநாடு பங்களாவில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் காவலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார். 10 பேர் கொண்ட கும்பல் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக காயமடைந்த நபர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் எஸ்.பி. முரளிரம்பா, “இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொடநாடு பங்களாவில் மொத்தம் 13 வாயில் கதவுகள் இருக்கின்றன. இவற்றில் 10-ம் எண் வாயில்கதவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் (50) என்ற காவலாளியை திருடர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவரை கட்டிப்போட்டுவிட்டு திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த அவர் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பங்களாவில் உள்ள ஓர் அறையின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தப் பொருளும் திருடுபோனதாக தெரியவில்லை.

மற்ற காவலாளிகள் அளித்த தகவலின்படி உடனடியாக போலீஸ் படை அனுப்பிவைக்கப்பட்டது. மோப்ப நாய்களுடன் வந்த 5 போலீஸ் படை சோதனையில் ஈடுபட்டது. முதல்கட்ட சோதனையில் இது திருட்டு முயற்சி என்றே தெரிகிறது. தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.

கொலை செய்யப்பட்ட ஓம் பகதூர் (50), தாக்கப்பட்ட கிருஷ்ண பகதூர் ஆகிய இருவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது கொடநாடு எஸ்டேட் பகுதி உயர் பாதுகாப்புப் பகுதியாக இருந்தது. அப்பகுதிக்குள் செல்வதற்கு முன்னர் ஆங்காங்கே இருக்கும் சோதனைச்சாவடிகளை கடந்தே செல்ல வேண்டும். கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், அவர் மறைவுக்குப் பின் கடந்த 4 மாதங்களாக அங்கே போலீஸ் பாதுகாப்பு ஏதுமில்லை.

கடைசியாக கடந்த 2015 நவம்பர் மாதம் ஜெயலலிதா கொடநாடு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பங்களாவும் ஜெயலலிதாவால் ஓய்வுக்காக பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்நிலையில், இன்று கொடநாடு எஸ்டேட் பங்களாவில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply