மக்கள் நலனுக்காக திரை ஊடகத்தைப் பயன்படுத்திய முதல் நடிகர் புரட்சித்தலைவர்: எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

திருப்பூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
உழைப்பதற்கு அஞ்சாதவர்கள் திருப்பூர் மக்கள். திருப்பூர் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுகிறது. “வேலை காலியில்லை” என்ற அட்டை இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளிலும் தொங்கும். ஆனால் நமது திருப்பூரில் “வேலைக்கு ஆட்கள் தேவை” என்னும் வாசகம் பொறிக்கப்பட்ட விளம்பர அட்டை இருக்கும். இவ்வாறு உழைப்பவர்கள் திருப்பூர் வந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு வேலை உறுதி. திருப்பூருக்கு பல்வேறு சிறப்புகளும் இருக்கிறது. 

திருப்பூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் பொருட்டு பேருந்து நிலையம் அருகில் அவிநாசி- திருப்பூர்-பல்லடம்-பொள்ளாச்சி-கொச்சி (வழி) மீன்கரை சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கான ஆணையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்தார்கள். 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்தப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவடையும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருப்பூர் மீது வைத்திருந்த ஈடுபாட்டையும் அக்கறையையும் போலவே அம்மா வழியில் நடக்கும் இந்த அரசும் திருப்பூரில் அதிக கவனம் செலுத்தி, 16.2.2017 முதல் இன்றுவரை பல்வேறு நலத்திட்டப்பணிகளை செவ்வனே செய்து வருகிறது.

உலகிலேயே மக்கள் நலனுக்காக திரை ஊடகத்தைப் பயன்படுத்திய முதல் நடிகர் புரட்சித்தலைவர் அவர்கள்தான். தமிழ் மண்ணில் கடைசி மனிதன் உள்ள வரை திரைப்படங்கள் போன்ற ஊடகங்கள் இருக்கும் வரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் இத்தனை புகழுக்கும் காரணம் அவர் திரையில் நடித்ததைப் போலவே  தன் சொந்த வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டதுதான். மக்கள் திலகம் திரைவாழ்க்கையில் எப்படி புகழின் உச்சத்தை தொட்டாரோ! அதைப்போல அரசியலிலும் சாதனை உச்சத்தைத் தொட்டார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் அடுக்கடுக்கான திட்டங்களை கொண்டு வருவதற்கு அவர் வாழ்க்கையின் துவக்கத்தில் பட்ட கஷ்டங்களும் போராட்டங்களும்தான் காரணமாக இருந்தன.

கழகத் தொண்டர்கள் மக்கள் திலகம், எம்.ஜி.ஆரைப் போல, புரட்சித்தலைவி அம்மா அவர்களைப்போல தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தால் உங்களைத் தேடி பதவிகள் வரும்.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இந்த அரசு ஆட்சியில் இருக்கும்போதே போதே அடிக்கல் நாட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டு 3 மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply