ஜெயா டிவி, விவேக் வீடு உள்ளிட்ட பகுதிகளில் 5-வது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை

“ஆபரேஷன் கிளீன் மணி” என்ற பெயரில், வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை வருமான வரித்துறை தொடங்கி இருக்கிறது.அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல் கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, புதுச்சேரியிலும் கடந்த 9-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உடையவர்களின் 187 இடங்களில் சுமார் 1,600 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சசிகலா, டி.டி.வி.தினகரன், திவாகரன், நடராஜன், இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆகியோரின் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் தொடங்கிய இந்த சோதனை இடைவிடாமல் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

இதில், மிக முக்கியமான நிறுவனங்கள் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், நமது எம்ஜிஆர் அலுவலகம், மிடாஸ் மது பான ஆலை, கோடநாடு எஸ்டேட் ஆகியவை ஆகும்.

இந்நிலையில், வருமான வரித்துறை சோதைன 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. ஜெயா டிவி, ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு, கிருஷ்ணப்பிரியா வீடு உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று சோதனை நடத்தப்படுகிறது.

பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அந்த ஆவணங்களை அவர்கள் சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு எடுத்து வந்து உள்ளனர். தணிக்கை அதிகாரிகளின் உதவியுடன் அந்த ஆவணங்களை மதிப்பிடும் பணியில் வருமான வரி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட தங்கம், வைர நகைகள் உள்ளிட்டவற்றை மதிப்பிடும் பணியும் நடைபெற்று வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply