அமெரிக்காவில் கலிபோர்னியா பள்ளியில் துப்பாக்கி சூடு : 5 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். இதில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் பாதுகாப்பு கருதி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் அங்கு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெஹமா கவுண்டி பகுதியில் உள்ள பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அங்கிருந்தவர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.

இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தொடக்க பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் துப்பாக்கியால் சுட்ட நபரை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், அங்கிருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்தினர். துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் டெக்சாஸ் மாகாணத்தில் பாப்டிஸ்ட் சர்ச் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply