பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதால் 2018-ல் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்: அமெரிக்க புவியியலாளர்கள் எச்சரிக்கை

அமெரிக்க புவியியலாளர்கள் கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம் வாஷிங்டனில் அண்மையில் நடைபெற்றது. இதில் கொலராடோ பல்கலைக்கழக பேராசிரியர் ரோஜர் பில்ஹம், பென்ரிக் பல்கலைக்கழக பேராசிரியை ரெபேக்கா ஆகியோர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 1900-ம் ஆண்டு முதல் இப்போது வரை ரிக்டர் அலகில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான நிலநடுக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் குறிப்பிட்ட 5 காலக்கட்டங்களில் ஆண்டுக்கு 25 முதல் 30 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதர காலகட்டங்களில் ஆண்டுக்கு 15 நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தோம். எப்போதெல்லாம் பூமியின் சுழற்சி வேகம் குறைந்ததோ அப்போது அதிக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எங்களது ஆய்வின்படி பூமியின் சுழற்சிக்கும் நிலநடுக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

தற்போது பூமியின் சுழற்சி வேகம் சிறிது குறைந்துள்ளது. இதன்காரணமாக ஒரு நாளின் கால அளவு ஒரு மில்லி விநாடி அளவுக்கு குறைந்திருக்கிறது. இதனை அணு கடிகாரங்கள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

அதேநேரம் சுழற்சி வேகம் குறைந்திருப்பதால் பூமிக்கடியில் மிகப்பெரிய அளவில் சக்தி வெளிப்படும். இதனால் வரும் 2018-ம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்த ஆண்டு இதுவரை ரிக்டர் அலகில் 7 புள்ளிகளுக்கு மேல் 6 நிலநடுக்கங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. ஆனால் அடுத்த ஆண்டில் 20 நிலநடுக்கங்கள் வரை ஏற்படலாம்.

இந்த நிலநடுக்கங்கள் பூமியின் எந்த பகுதியில் ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. எனினும் பூமத்திய ரேகை பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply