எல்லா துறைகளிலும் தமிழகம் இருபது ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதும், அப்போது முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசிய விவரமும் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:- கவர்னர் உரை, கொள்கை அறிவிப்பாக அமையாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் இந்த அரசு நன்றி தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கிறீர்கள் என வெளிப்படையாக இந்த அரசின் சார்பில் ஒப்புக்கொண்டு இருக்கிறீர்கள்.

ஆனால் அவர்கள் மூலம் தமிழக மக்களின் நலனுக்காக எதையாவது சாதிக்க முடிந்திருக்கிறதா? 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், வர்தா புயல், வறட்சி நிவாரணம் ஆகியவற்றுக்காக நீங்கள் கேட்ட நிவாரண நிதி முறையே ரூ.25,912 கோடி, ரூ.22,573 கோடி, ரூ.39,565 கோடி ஆகிய தொகையை மத்திய அரசு தந்ததா? ஒகி புயல் நிவாரண நிதியாக கேட்ட ரூ.13,520 கோடி அனுமதிக்கப்பட்டதா?

கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்ற நமது முதல்-அமைச்சரின் கோரிக்கை, கவர்னர் உரையில் இல்லை.

14-வது மத்திய நிதியாணையத்தின் இழப்புகளுக்காக ரூ.2 ஆயிரம் கோடி சிறப்பு நிதி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பின்போது, மத்திய அரசு மானியத்தில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்காக கேட்ட 90 சதவீத நிதி போன்றவையும் குறிப்பிடப்படவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் திட்டம், கெயில் திட்டம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவையும் இந்த உரையில் இடம் பெறவில்லை. மாநில அரசு கேட்ட எதையுமே மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதை கவர்னர் உரை மூலம் தெரிகிறது.

மத்திய அரசை பாராட்டுவதன் மூலம் தமிழக மக்களுக்கு பல திட்டங்களைக் கொண்டு வந்தால் உங்களை பாராட்ட தி.மு.க. தயார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி: பா.ஜ.க., காங்கிரஸ் ஆட்சியில் 14 ஆண்டுகள் நீங்கள் மத்திய அரசில் இடம் பெற்றிருந்தீர்கள். அதிகாரம் உங்கள் கையில் இருந்தும் நீங்கள் என்னத்தைப் பெற்றீர்கள் என்பதைக் கூறினால் நல்லது.

மு.க.ஸ்டாலின்: இப்படி கேட்பீர்கள் என்று தெரிந்து அதற்கான பட்டியலோடு வந்தேன். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியது, பொடா சட்டத்தை ரத்து செய்ய குரல் கொடுத்தது, சென்வாட் வரி ரத்து உறுதிமொழியை நிறைவேற்றியது, காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, காவிரி நதிநீர் தொடர்பான இடைக்காலத் தீர்ப்பைப் பெற்றது. இடைக்காலத் தீர்ப்பின்படி காவிரி நதிநீர் ஆணையம் அமைத்தது, காவிரி இறுதித் தீர்ப்பைப் பெற்றது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்தைப் பெற்றது, காமராஜர் எண்ணூர் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தது, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்தது, 3 ஆயிரத்து 276 கி.மீ. நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றி, மேம்பாலங்கள் அமைத்து, விரிவாக்கம் செய்தது, சேலம் ரோலிங் மில் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தியது, தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவியது, சேலத்திற்கென தனி ரெயில்வே கோட்டம், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது, சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சேதுசமுத்திர திட்டம், நெம்மேலியில் கடல் நீர் சுத்திகரிக்கும் திட்டம், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் சாலைகளை அகலப்படுத்தும் திட்டம், அனைத்து மீட்டர் கேஜ் ரெயில் பாதைகளையும் பிராட் கேஜ் பாதைகளாக மாற்ற ஒப்புதல் பெறப்பட்டது, 90 ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டது, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், ஒகனேக்கல் குடிநீர் திட்டம், தேசிய கடல்சார் பல்கலைக்கழகம், திருவாரூரில் தேசிய பல்கலைக்கழகம், திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம், மத்திய அரசின் மூலம் ரூ.72 ஆயிரம் கோடி விவசாயக் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி போன்ற சாதனை திட்டங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சிகாலத்தில் மத்திய அரசின் மூலமாக நிகழ்த்தப்பட்டுள்ளன.

அமைச்சர் ஜெயக்குமார்: முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொலை செய்ததையும் இந்த சாதனையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மு.க.ஸ்டாலின்: விடுதலை புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரனை தூக்கிலிட வேண்டுமென்று பேசியவர்கள் நீங்கள். அதை மூடி மறைக்க இப்படி தவறான தகவல்களை பதிவு செய்வது தவறு.

உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று 2016 ஆளுநர் உரையில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த உரையில் அது இல்லை. தமிழ்நாடு ஐகோர்ட்டு என்று மாற்றவும் வலியுறுத்தப்பட்டது.

அமைச்சர் சி.வி.சண்முகம்: தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்ற பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின்: கடந்த கவர்னர் உரையில் மதுரை தூத்துக்குடி இண்டஸ்ட்ரியல் காரிடார், சென்னை பெங்களூரு இண்டஸ்ட்ரியல் காரிடார் பற்றி அறிவிக்கப்பட்டது. இந்த உரையில் இல்லை.

அமைச்சர் எம்.சி.சம்பத்: அந்தத் திட்டங்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளன.

மு.க.ஸ்டாலின்: இந்த கவர்னர் உரையில் குறிக்கோள் இருப்பதை விட ஏராளமான இடைவெளிகள் இருப்பதை பார்க்க முடிகிறது. குறிக்கோள் இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறது என்பதை கவர்னர் உரை காட்டுகிறது.

கடந்த செப்டம்பர் 2015-ல் இங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவற்றின் கதி என்ன?

அமைச்சர் எம்.சி.சம்பத்: அதில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதல்-அமைச்சர் திறந்து விட்டார். 61 ஒப்பந்தங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. பெரிய நிறுவனங்கள் வரும்போது, இடம் பார்த்துக் கொடுப்பது போன்ற பல பணிகள் இருக்கின்றன.

மு.க.ஸ்டாலின்:- அத்திக்கடவு அவினாசி திட்டம், தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தில் என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்? கூடங்குளத்தில் இருந்து கிடைக்கக்கூடிய மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை என்னவானது? பத்து ஸ்மார்ட் சிட்டிகள் திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை இடம் தேர்வு என்னவானது?

முதல்-அமைச்சர்: அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் எனது பதிலுரையில் கூறுகிறேன்.

மு.க.ஸ்டாலின்: 201718-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசுக்கு 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாய் கடன் இருக்கிறது என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவர் தலை மீதும் 80 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்திருக்கிறோம். அந்த பேராபத்திலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதைப் பற்றி எந்தவித கொள்கை அறிவிப்பும் இந்த கவர்னர் உரையில் இல்லை. இப்படிப்பட்ட நெருக்கடியான நிதிநிலை வளர்ந்து வரும் கடன் சுமைக்கிடையே, திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறுவது எப்படி சாத்தியம்?

நிதிநிர்வாகம் எல்லாவற்றிலும் தமிழகம் இன்றைக்கு இருபது ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டது. இந்த கவர்னர் உரை, அடிப்படை இலக்கணத்தை மீறிதாக உள்ளது. யாருக்கும் பயனில்லாத, உயிரோட்டம் இல்லாத, சம்பிரதாய உரைதான்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பற்றி கவர்னர் உரையில் குறிப்பிடப்படவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கவும், மற்ற பல்வேறு வழக்குகளில் சிக்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று வருவோரையும் விடுதலை செய்ய வேண்டும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு விடுதலை கேட்ட உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply