ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி 24-ந்தேதி சென்னை வருகை

ஜெயலலிதா பிறந்த நாளான 24-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருகிறார். மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கிவைக்கிறார்.மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24-ந்தேதி (சனிக்கிழமை) பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் மற்றும் மரக்கன்று நடும் விழா தமி ழக அரசு சார்பில் நடத்தப்பட இருக்கிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க இருக்கிறார்.

இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் வருகிறார். அன்று மாலை 5.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவரை, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

விமான நிலையத்தில் இருந்து நேராக கலைவாணர் அரங்கத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி காரில் வருகிறார். அங்கு நடைபெறும் விழாவில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். மேலும், பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை அவர் தொடங்கிவைப்பதுடன், மரக்கன்றையும் நடுகிறார்.

அதன்பிறகு, மாலை 6.50 மணிக்கு அங்கிருந்து புறப்படும் பிரதமர் நரேந்திரமோடி நேராக கவர்னர் மாளிகை செல்கிறார். அன்று இரவு அங்கேயே அவர் தங்குகிறார். மறுநாள் (25-ந்தேதி) காலை 9.40 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்படும் நரேந்திரமோடி ஐ.என்.எஸ். அடையார் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்கிறார்.

புதுச்சேரி செல்லும் பிரதமர் நரேந்திரமோடி, காலை 10.45 மணியளவில் அங்குள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர், அங்கிருந்து ஆரோவில் புறப்பட்டு செல்கிறார். முற்பகல் 12 மணியளவில் அங்கு நடைபெறும் ஆரோவில் உதய தின விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.

தொடர்ந்து, லாஸ்பேட்டைக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடி, மாலை 3 மணியளவில் அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கூட்டம் முடிந்ததும், புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் திரும்பும் அவர், அங்கிருந்து அன்று மாலையே டெல்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி, சென்னை மற்றும் புதுச்சேரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட இருக்கிறது.

பிரதமர் நரேந்திரமோடி சென்னை வரும் 24-ந்தேதி தான், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. ஆனால், அந்த விழாவில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply