5 நாட்கள் பரோல் நிறைவடைந்தது: பெங்களூரு சிறையில் இன்று சரணடைகிறார் சசிகலா: புகழேந்தி தகவல்

சென்னையில் தங்கியுள்ள சசிகலாவின் 5 நாட்கள் பரோல் விடுப்பு இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. எனவே பெங்களூரு மத்திய சிறையில் இன்று பிற்பகலில் சசிகலா சரணடைவார் என அவரது ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சசிகலா 15 நாட்கள் அவசர பரோல் கோரினார். கடந்த 6-ம் தேதி சிறை நிர்வாகம் சில நிபந்தனைகளுடன் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கியது.

இதையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா சென்னைக்கு சென்று கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார். சசிகலாவின் 5 நாட்கள் பரோல் விடுப்பு வியாழக்கிழமையுடன் நிறைவடைவதால், மாலை 5 மணிக்குள் அவர் சிறையில் சரணடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சசிகலாவின் ஆதரவாளர் புகழேந்தியிடம் கேட்டபோது, ”5 நாட்கள் பரோல் நிறைவடைவதால் சசிகலா வியாழக்கிழமை பிற்பகலில் சிறையில் சரணடைவார். நடராஜனின் உடல் முழுமையாகக் குணமடையவில்லை. இதனைக் காரணம் காட்டி சசிகலா பரோல் நாட்களை நீட்டிக்கக் கோரவில்லை. எனவே சட்டத்தையும், சிறை விதிமுறையையும் மதிக்கும் வகையில் சசிகலா சிறையில், உரிய நேரத்தில் கையெழுத்திடுவார்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply