இலங்கை தமிழ் தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக 5-ந்தேதி இலங்கைக்கு சென்றார். அதிபர் கோத்தபய ராஜபக்சே, வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

இந்தநிலையில், 3-வது நாளான நேற்று ஜெய்சங்கர், இலங்கை தமிழ் தலைவர்களை சந்தித்தார். சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகள் குழு, ஜெய்சங்கரை சந்தித்தது.

அவர்களிடம் இலங்கையில் அதிகார பகிர்வு, வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினார். மாகாண கவுன்சில் முறையின் பங்கு குறித்தும் விவாதித்தார்.

1987-ம் ஆண்டு, இலங்கையில் மாகாண கவுன்சில் முறை கொண்டுவரப்பட்டது. தற்போது, 9 மாகாண கவுன்சில்கள் உள்ளன. ஆனால், மாகாண கவுன்சில் முறையை ஒழிக்க வேண்டும் என்று இலங்கை அரசின் கூட்டணி கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த பின்னணியில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.

இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை ஜெய்சங்கர் சந்தித்தார். மீன்பிடித்தொழிலில் ஒத்துழைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இச்சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்ததாக அவர் கூறினார்.

இலங்கை தோட்ட வீட்டு வசதித்துறை மந்திரி ஜீவன் தொண்டமானையும் அவர் சந்தித்தார். மலையக பகுதி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். பின்தங்கிய ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி சதாசிவம் வியலேந்திரனையும் சந்தித்தார். அத்துடன், இலங்கை தொழிலதிபர்களையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.

முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கேவை அவர் சந்தித்தார். இருதரப்பு உறவுக்கு அவர் நீண்ட காலமாக ஆதரவு தெரிவிப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் ஜெய்சங்கர் சந்தித்து, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply